சிறுதானிய போட்டிகள், திருவிழாக்கள்.. ரூ.50 இலட்சத்தில் மதி கஃபே : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர்கள் துறைவாரியாக உறுப்பினர்களின் கேள்வி பதில்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். மேலும் மானியக் கோரிக்கைகளையும் துறைவாரியாக அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் இன்றைய சட்டப்பேரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கம் துறை & வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரகக் கடன் துறைக்கான மானியக் கோரிக்கையை வெளியிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவிப்புகள்

*7,000 சுய உதவிக் குழுக்களுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.

*40,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி 90 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

* 4,000 தனிநபர் நிறுவனங்கள் மற்றும் 75 குழு நிறுவனங்களுக்கு இணை மானிய நிதி திட்டத்தின் மூலம் முறையான நிதி நிறுவனங்களிடமிருந்து 150 கோடி ரூபாய் (இதனில், 50 கோடி ரூபாய் இணை மானிய நிதியாக பயனாளிகளுக்கு வழங்கப்படும்) கடன் உதவி வழங்கப்படும்.

*ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் (சுமார் மூன்று இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் குழுக்களுக்கு) 30 கோடி ரூபாய் செலவில் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்.

*10,000 சுய உதவிக் குழுக்களுக்கு 10 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,000/- வீதம் அவர்களின் சேமிப்போடு, தொகுப்பு நிதியை அதிகப்படுத்தி கடன் இணைப்பு பெறுவதற்கு வழிவகுக்கும் வகையில் 10 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும்.

*7,500 தொழில் முனைவோர்களுக்கு ஐந்து கோடியே அறுபத்து இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 7,500 தொழில் முனைவோர்களுக்கு ஐந்து கோடியே அறுபத்து இரண்டு இலட்சம் ரூபாய் செலவில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

*“வானவில் மையம்” என்றழைக்கப்படும் பாலின வள மையமானது வட்டார அளவில் ஒரு மாவட்டத்திற்கு 3 மையங்கள் வீதம் 37 மாவட்டங்களில் 111 வானவில் மையங்கள் ஐந்து கோடியே ஐம்பத்தைந்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

*சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் வளர் இளம் பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சி 200 வட்டாரத்தில் உள்ள 6,083 ஊராட்சிகளில் நான்கு கோடியே அறுபத்தைந்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

*அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும், சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கும், பெண்கள் தொடர்பான சமூகப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பு சார்ந்த சட்ட விழிப்புணர்வு பயிற்சி மூன்று கோடியே இருபத்து நான்கு இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

*பெண்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிறுதானிய போட்டிகள் மற்றும் திருவிழாக்கள் ஒரு கோடியே எண்பது இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும்.

*சுய உதவிக் குழு மகளிர் விவசாயிகளால் உயர் மகசூல் தரும் கரும்பு இரகங்களின் பரு நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்திட, அலகுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் 50 அலகுகளுக்கு ஒரு கோடி ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்படும்.

*மாநிலம் முழுவதும், 50 மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் 50 இளைஞர் திறன் திருவிழாக்கள் 75 இலட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.

*பெருநகர சென்னை மாநகராட்சியில் 8 இடங்களில் 50 இலட்சம் ரூபாய் செலவில் மதி கஃபே (Mathi Cafe) அமைக்கப்படும்.

*4,250 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்திட சமையல் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவு தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படும்.

*மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய 25 அடுக்குமாடி குடியிருப்புகளில் (Apartment Bazaars) 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காட்சிகள் நடத்தப்படும்.

The post சிறுதானிய போட்டிகள், திருவிழாக்கள்.. ரூ.50 இலட்சத்தில் மதி கஃபே : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!! appeared first on Dinakaran.

Related Stories: