17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

பிரிட்ஜ்டவுன்: டி20 உலக கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ரோகித், விராத் கோஹ்லி இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். மார்கோ யான்சென் வீசிய முதல் ஓவரில் கோஹ்லி 3 பவுண்டரிகளை விளாசினார். மகராஜ் வீசிய 2வது ஓவரின் முதல் 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், 4வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, சூரியகுமார் 3 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் விக்கெட் கீப்பர் கிளாசன் வசம் பிடிபட்டார். இந்தியா 4.3 ஓவரில் 34 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கோஹ்லி அக்சர் படேல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது.
ஒரு முனையில் கோஹ்லி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, அதிரடியில் இறங்கிய அக்சர் அவ்வப்போது பந்தை இமாலய சிக்சராகத் தூக்கி ஸ்கோரை உயர்த்தினார். அரை சதத்தை நெருங்கிய அக்சர் 47 ரன் (31 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

கோஹ்லி அக்சர் 4வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து கோஹ்லியுடன் ஷிவம் துபே இணைந்தார். 48 பந்தில் அரை சதம் அடித்த கோஹ்லி, அதன் பிறகு டாப் கியருக்கு எகிற இந்திய ஸ்கோர் வேகம் எடுத்தது. மறுமுனையில் துபேவும் தன் பங்குக்கு பவுண்டரி, சிக்சர் விளாசி கை கொடுத்தார். கோஹ்லி 76 ரன் (59 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), துபே 27 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ஜடேஜா 2 ரன் எடுத்து கடைசி பந்தில் அவுட்டானார். இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. ஹர்திக் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மகராஜ், அன்ரிச் தலா 2, யான்சென், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 20 ஓவரில் 177 ரன் எடுத்தால் முதல் முறையாக உலக சாம்பியனாகலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 8 விக்கெட்களை இழந்து 169 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் மில்லரும் ரபடாவும் அவுட்டாக இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. 1983-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. 2007,2011-தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பைகளை வென்று அசத்தியது.

கபில்தேவ், தோனியை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து உலக முழுவதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈட்டுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

The post 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: