மேலும் தமிழக அரசு 26 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் நீர் தேங்கும், மேலும் சில இடங்களில் தரைப்பாலங்கள் வரை நீர் தேங்கவும், தரைபாலங்கள் மூழ்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொலை தூர பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில கிலோமீட்டர் தூரம் கூடுதலாக இருந்தாலும் சுற்றி செல்ல அறிவுறுத்தியுள்ளோம். பயணிகள் பாதுகாப்பு முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பணிமனைகளில் மழைநீர் வடிகால்வாய்களில் அடைப்பு இருந்தால் உடனடியாக சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் நீர் கசிவு, நீர் உள்ளே புகுதல் மற்றும் சாய்வு இருக்கை சரி வர இயங்கவில்லை என பயணிகள் கூறும் குறைகளை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதனை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.