தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை; அவசர உதவிக்கு 1,350 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: அவசர உதவிக்கு 1,350 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்று ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி பர்சேஸ் செய்வதை ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கினர். இன்று இறுதிக்கட்ட பர்சேஸ் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று காலை முதல் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் படையெடுத்தனர்.

இதனால், தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் காலை 8 மணி முதலே தீபாவளி விற்பனை களைகட்டியது. ஜவுளி நிறுவனங்கள் உள்பட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அதிகாலை முதலே திறக்கப்பட்டிருந்தது. மக்கள் குடும்பத்துடன் வந்து ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். கடை வீதிகளில் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சில இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவசரகால மேலாண்மை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது; அவசர உதவிக்கு 1,350 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி அவசர கால உதவிக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளியை ஒட்டி 3 நாட்களுக்கு தடையின்றி ஆம்புலன்ஸ் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 70 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. விபத்து ஏற்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 108 அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு சாதாரண நாட்களில் 12,000 தொலைபேசி அழைப்புகள் வருவது வழக்கம். தீபாவளிக்கு 20,000 தொலைபேசி அழைப்புகள் வரும் என்பதால் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

The post தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை; அவசர உதவிக்கு 1,350 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: