தென்சென்னை தொகுதியில் சிதிலமடைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுக இளைஞரணி நிர்வாகள் பேரணியாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா கலந்துகொண்டார்.

பிரச்சாரத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ அமைக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை கடலூர் புதிய ரயில் பாதை திட்டம். சென்னை – எழும்பூரிலிருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் தென் தமிழகத்திலிருந்து சென்னை எழும்பூர் வரும் அனைத்து விரைவு ரயில்களும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடைமேடைகளின் நீளத்தை நீட்டித்து, விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் பயணிகளின் வசதிக்காக மாம்பலம், கிண்டி மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையங்களின் நடைமேடைகள் 1 மற்றும் 2ல் நகரும் படிகட்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தென்சென்னை தொகுதியில் உள்ள பிரதான சாலை சந்திப்புகளில், நடைமேம்பாலம், ஆகாய நடைமேம்பாலம், நகரும் படிக்கட்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான ஓஎம்ஆர், ஈசிஆர் சாலை பகுதிகளில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேளச்சேரி தாம்பரம் சாலையில் கிராண்ட்மால் அருகில் சாலையை கடக்க மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை தேசிய அந்தஸ்து மிக்க மருத்துவ நிறுவனமாக நிலை உயர்த்திட வழிவகை செய்யப்படும். வேளச்சேரி பகுதி மக்களின் பிரதான கோரிக்கையான ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள கிருஷ்ணா நுழைவாயில் திறப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அம்ருத் 2.0 உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி பெற்று வேளச்சேரி -வீராங்கால் ஓடையில் வெள்ளத்தடுப்புச் சுவர் அமைக்கப்படும்.

வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளும் கடற்கரையின் அழகை அருகில் சென்று ரசித்திடும் வகையில் மெரினாவில் உள்ளது போலவே பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் மரப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளின் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை அதிகரித்திட தென்சென்னை தொகுதியில் உள்ள பள்ளிகளில் நவீன ஸ்மார்ட் வகுப்பறை வசதி செய்ய நிதி ஒதுக்கப்படும். தென்சென்னை தொகுதியில் சிதிலமடைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் சீரமைக்கப்படும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை மண்டலம் வாரியாக குறைதீர் கூட்டம் நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைள் மற்றும் தேவைகளுக்கு உடனடி தீர்வுகள் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தென்சென்னை தொகுதியில் சிதிலமடைந்துள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: