சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தாகம் தணிக்கும் இளநீர், தர்பூசணி, வெள்ளரி விற்பனை ஜோர்

வேலூர்: சுட்டெரிக்கு கோடை வெயிலால் தாகம் தணிக்கும் இளநீர், தர்பூசணி, வெள்ளரி விற்பனை ஜோராக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உட்பட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கோடை வெயிலிலிருந்து உடல்நிலையை பாதுகாக்க கூழ், இளநீர், பதனீர், தர்பூசணி, சர்பத், பழச்சாறுகள், வெள்ளரி பிஞ்சுகள், பழங்கள் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் கடைகளில் விற்கப்படும் அதிகளவில் சர்க்கரை உள்ள குளிர் பானங்களை வாங்கி பருகாமல் மோர், எலுமிச்சை தண்ணீர் போன்ற வீட்டில் செய்யும் பானங்களைப் பருக வேண்டும் என தெரிவித்துள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களின் பல பகுதிகளில் தாகம் தணிக்கும் இளநீர், தர்பூசணி, வெள்ளரி விற்பனை தற்போது அமோகமாக நடக்கிறது. லோடு ஆட்டோ, சைக்கிள், தள்ளுவண்டிகள் மூலம் இளநீர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சுகள் போன்றவை நேரடியாக தெருக்களிலும் சென்று விற் கப்படுவதால் பொதுமக்கள் எளிதாக வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘குளிர் பானங்களை வாங்கி குடிப்பதை விட மக்கள் தற்போது இயற்கையான, பக்க விளைவுகள் இல்லாத இளநீர், தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு போன்றவற்றை தேடி விரும்பி சாப்பிடுவது வரவேற்கத்தக்கது.

இவைகளின் விளைச்சல் வறட்சியின் காரணமாக சாகுபடி குறைந்து போனதால் தற்போது விலை சிறிதளவு உயர்ந்துள்ளது’ என்றனர். பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலுக்கு தேவையற்ற கலோரிகளை மட்டுமே கொடுக்கிறது. அதனால் வேறு பயன்கள் எதுவுமில்லை. நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை உண்ணலாம். தண்ணீர் தாகத்தை தீர்க்க வெள்ளரி பிஞ்சுகள் சிறந்த பலனை அளிக்கும். தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை தரும். அதன் விதைகள் சிறுநீரகத்திற்கு நல்லது. நீர்ச்சத்து மிகுந்துள்ளது. வெள்ளரியில் சோடியம் அதிகளவில் உள்ளது. உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடுசெய்யும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. கோடை வெயிலில் சுற்றுவதால் ஏற்படும் சரும பாதிப்புகளுக்கு வெள்ளரி சாறு நல்ல தீர்வு என டாக்டர்கள் கூறுகின்றனர்.

The post சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தாகம் தணிக்கும் இளநீர், தர்பூசணி, வெள்ளரி விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Related Stories: