சண்டீசர் சூடிய மாலை

சிவாலயங்களுக்கு உரிய பரிவார ஆலயங்களில் ஒன்று சண்டேசுரருக்கு உரியதாகும். சிவனார்க்கு அர்ப்பணிக்கப்பெறும் அனைத்தும் சண்டீசர்க்கே சேரும். அறுபத்து மூன்று நாயன்மார்களில், வயதில் மிக இளமையில் சிவப்பேறு பெற்றவர் அவரே. அதனால்தான் சேக்கிழார் பெருமான்சண்டீசரை சிறிய பெருந்தகையார் எனக் குறிப்பிடுவார். அவர்தம் வரலாறு கூறி நிறைவு செய்யும்போது,“வந்து மிகைசெய் தாதைதாள் மழுவால் துணித்த மறைச்சிறுவர்

அந்த உடம்பு தன்னுடனே அரசனார்
மகனார் ஆயினான்
இந்த நிலைமை அறிந்தார் யார்?’’
– எனக் கூறியுள்ளார்.

தன் தந்தையின் கால்தனை மழுவால் வெட்டிய வரலாறுதனை அப்பர்பெருமான்,“தழைத்த ஓர் ஆத்தியின்கீழ்த் தாபரம் மணலாற் கூப்பிஅழைத்து அங்கே ஆவின் பாலைக் கறந்து கொண்டு ஆட்டக்கண்டுபிழைத்த தன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசகுழைத்த ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே’’
– என்பார்.

அப்பர் கூறிய அந்த வரலாற்றைப் பின்னாளில் சேக்கிழார் பெருமான் பின்வருமாறு விரித்துரைத்துள்ளார். விசாரசருமன் எனும் பெயருடன் சோழநாட்டுச் சேய்ஞலூரில் (திருப்பனந்தாள் – குடந்தை சாலையில் உள்ள ஊர்) அந்தணர் குலத்தில் பிறந்த சிறுவர், அவ்வூர்ப் பசுக்களை மேய்த்து வந்த இடையன், மாடுகளை அடிப்பது கண்டு துடித்து, இனிமேல் தானே மாடுகளை மேய்ப்பதாகக் கூறி மாடுகளை மேய்த்து வந்தார். நாளும் அவ்வூரில் உள்ள மண்ணியாற்று மணலில் இலிங்கம் ஒன்றைக் கூப்பி அதற்குத் தான் மேய்க்கும் பசுக் களின் பாலைக் கறந்து அபிஷேகம் செய்து கொன்றைப் பூக்களைச் சூட்டுவதையே கடமையாகக் கொண்டு ஒழுகினார்.

இதனைக் கண்ட அவ்வூர் அந்தணர்கள் விசார சருமனின் தந்தையிடம் சென்று முறையிட்டனர். உண்மையறிய தந்தை எச்சதத்தன், விசாரசருமன் அறியாவண்ணம் புலர்காலைப் பொழுதே சென்று குராமரம் ஒன்றின் மேல் ஏறியமர்ந்து, தன் மகனின் செய்கையைக் கண்காணித்தார். வழக்கம்போல் அன்றும் விசாரசருமன் திருமஞ்சனம்ஆட்டு தலையே தன் கடனாகச் செய்ததைக் கண்டு மரத்திலிருந்து இறங்கி வந்து தன் கையிலிருந்த கோலினால் தன் மகனின் முதுகில் அடித்ததோடு, கொடுஞ்சொற்கள் கொண்டும் திட்டினார். சிவ பூஜையில்ஒன்றியிருந்த விசாரசருமருக்கு தந்தை செய்த செயல்கள் எதுவும் தெரியவில்லை.

வெகுண்டு பலகால் அடித்தும், திருமஞ்சனம் செய்வதிலேயே கருத்தாய் இருந்த பாலகன் மேல் கோபமுற்ற எச்சதத்தன் தன் காலால் திருமஞ்சனக் குடத்தை இடறித் தள்ளினார். பால் சிந்தியது. இடறியவர் தந்தை என்பதை உணர்ந்த விசார சருமர் கீழே கிடந்த கோலொன்றை எடுக்க, அது இறையருளால் மழுவாயுதமாக மாறியது. அக்கோடரி கொண்டு தன் தந்தையின் கால்களை வெட்டி வீழ்த்தினார். நிலை குலைந்து தந்தையும் தரையில் வீழ்ந்தார். அந்நிலையில் சிவபெருமான் உமையம்மையாரோடு விடை மேல் எழுந்தருளினார். ‘‘அனைத்தும் நாம் உண்ட கலமும், உடுப்பனவும், சூடுவனவும் உனக்காகச் சண்டீசனும் ஆம் பதம் தந்தோம்’’ என்று திருவாய் மலர்ந்து தம் சடையில் அணிந்துள்ள கொன்றை மலர்மாலையை எடுத்து அப்புதல்வர் தம் திருமுடி யில் சூட்டியருளினார்.

தந்தையார்க்கும் அருள் பாலித்தனர். அன்று முதல் விசாரசருமர் சண்டீச பெரும் பதம் பெற்றார். பல்லவர் காலந்தொட்டே சண்டீசருக்குத் தனித்த திருமேனிகளைக் கோயில்கள் தோறும் கல்லிலும் செம்பிலும் வடித்து வழிபட்டு வந்துள்ளனர். சேக்கிழார் பெருமான் சண்டீசர் புராணத்தை விரிவாக எடுத்துரைப்பதற்கு 125 ஆண்டுகளுக்கு முன்பே மாமன்னன் இராஜராஜசோழனும், அவன் மகன் இராஜேந்திர சோழனும், தாங்கள் படைத்த தஞ்சைப் பெரிய கோயிலிலும், கங்கைகொண்ட சோழீச் சரத்திலும் இவ்வரலாறு முழுவதையும் தொடர் சிற்பக் காட்சிகளாகக் கல்லிலும் செம்பிலும் வடித்துக் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும், சண்டீசர் கோயில்களை மிகப் பெரிய அளவில் எடுத்துப் போற்றியுள்ளனர்.

தஞ்சைக் கோயிலின் இரண்டாம் கோபுரமான இராஜராஜன், திருவாயிலின் உபபீடப் பகுதியிலும், மிகப் பெரிய விமானத்தின் வடபுற வாயிற் படிக்கட்டின் பக்கவாட்டிலும் சண்டீசர் கதைத் தொகுப்புச் சிற்பக் காட்சிகள் உள்ளன. திருக்கோபுரத்தில் இடம்பெற்றுள்ள காட்சியின் அடிப்பகுதியில் நான்கு பசுக்கள் நிற்கின்றன. அதற்கு மேலாக மரமொன்று காணப்பெறுகின்றது. அதன்மேல் மறைந்தவாறு எச்சதத்தன் அமர்ந்துள்ளான்.

இதனை அடுத்து தன் தந்தையின் கால்களை மழுவால் வெட்டும் விசாரசருமன், அடுத்து சிவபெருமான் அமர்ந்திருக்க எதிரே கைகட்டிய நிலையில் விசார சருமன் சண்டீசராக நிற்கும் காட்சி ஆகியவை உள்ளன.  விமானத்தின் வடபுற வாயிற்படிக்கட்டின் கீழ்ப்புறம் உள்ள சிற்பத் தொகுப்பு மிக நேர்த்தியான சிற்பங்களைக் கொண்டு விளங்குகின்றது. முதற்காட்சியில் சிவலிங்கத் திருமேனியொன்றினை விசாரசருமர் வணங்கி நிற்கிறார். அருகே உள்ள குராமரத்தின் மேல் அமர்ந்த வண்ணம் அவரது தந்தை நடப்பதைக் கண்காணிக்கிறார்.

பின்புலத்தில், பசுக்கள் கூட்டமாக உள்ளன. தன் வலக்கையில் மழுவை ஏந்தி தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்த நிலையில் விசாரசருமரும், கால் வெட்டப்பட்டு கீழே விழுகின்ற நிலையில் அவரது தந்தையும் காணப் பெறுகின்றனர். இச்சிற்பத் தொகுப்பிற்கு அடுத்து விளங்கும் காட்சியில், உமாதேவி அருகே அமர்ந்திருக்க, சிவபெருமான் இரு கால்களையும் மடித்த நிலையில் அமர்ந்துகொண்டு, தரையில் மண்டியிட்டு அமர்ந்தவண்ணம் உள்ள விசாரசருமர் தலையில், தாம் சூடிய மாலையை எடுத்துத் தம் இருகரங்களாலும் சுற்றுகின்ற காட்சியுள்ளது. அருகே தேவியும் அமர்ந்துள்ளாள். இவை இராஜராஜ சோழன் சண்டீசர் கதையை நமக்குக்கல்லில் காட்டிய கவினுறு காட்சிகளாகும்.

தஞ்சைக் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு, இராஜராஜசோழன் அத்திருக்கோயிலுக்கு அளித்த ‘சண்டேஸ்வர பிரசாத தேவர்’ எனும் செம்பில் அமைந்த காட்சிப் படைப்புப் பற்றி விவரிக்கின்றது. இன்று அக்காட்சித் தொகுப்பு இடம் பெறாமல் மறைந்துவிட்ட போதும், அக்காட்சித் தொகுப்பு எவ்வாறு இருந்தது என்பதை அக்கல்வெட்டு மிகத் தெளிவாக விளக்குகின்றது. சேய்ஞலூர் பிள்ளையாருக்குத் திருமாலையை முடியிற் சூட்டும் சண்டேஸ்வர பிரசாததேவர், அவர் எழுந்தருளி நின்ற பத்மம், முயலகன், நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரி, மகாதேவர், சண்டேஸ்வரர், கால்வெட்டப்பெற்ற நிலையில் தரையில் விழுந்து கிடக்கும் அவர் தம் தந்தை, பிரசாதம் பெறுகின்றாராகவுள்ள சண்டேஸ்வரர், பிரசாதமாகச் செய்யப் பெற்ற புஷ்பமாலை, பிரபாவளி ஆகியவற்றோடு செம்பில் அமைந்த இப்படைப்புத் தொகுப்பு திகழ்ந்தது என்பதை அறியலாம்.

முதலாம் இராஜேந்திர சோழனால் எடுக்கப் பெற்ற கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் பெரிய கோயிலின்  விமானத்தின் அர்த்த மண்டபப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சுவரில் தஞ்சைக் கோயிலில் உள்ளதுபோன்றே மூன்று அடுக்குகளில் சண்டேஸ்வரர் கதைத் தொகுப்பு சிற்பங்களாக இடம்பெற்றுள்ளது. இவை சிற்றுருவச் சிற்பப் படைப்புகளாகும்.

இதே, கங்கைகொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் விமானத்தின் வடபுற வாயிலை ஒட்டியுள்ள தேவகோஷ்டமொன்றில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத மிகப் பெரிய சண்டேஸ்வர பிரசாததேவர் சிற்பமும், அதனைச் சுற்றி சுவரில் சண்டேஸ்வரர் புராணக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு காலை மடித்து சுகாசனமாக அமர்ந்த கோலத்தில் சிவபெருமான் திகழ அருகே உமாபரமேஸ்வரி மிக ஒய்யாரமாக ஒரு காலை மடித்து ஊன்றிய நிலையில் அமர்ந்துள்ளாள்.

ஏறத்தாழ எட்டடி உயரத்தில் இச்சிற்பம் அமைந்துள்ளது. பெருமானின் ஆசனத்திற்குக் கீழாகத் தரையில் மண்டியிட்ட வண்ணம் இரு கரங்களையும் கூப்பிய நிலையில் சண்டீஸ்வரர் அமர்ந்துள்ளார். சிவபெருமான் தம் இடக்கரத்தால் சண்டீசரின் திருமுடியைப் பிடித்தவாறு வலக் கரத்தால் தாம் சூடியிருந்த கொன்றை மாலையை எடுத்து சண்டீசரின் தலையில் சுற்றுகிறார். பெருமானின் மேலிரு கரங்களில் மானும் மழுவும் உள்ளன. வானத்தில் மிதந்தவாறு சூரியன், சந்திரன் விண்ணவர் கையுயர்த்திப் போற்றுகின்றனர்.

இச்சிற்பம், திகழும் தேவகோஷ்டத்தின் ஒருபுறம் பசுக்கள் நிற்க, விசாரசருமரின் தந்தை நடந்துவருகிறார். எதிர்ப்புறம் மர உச்சியில் விசாரசர்மரின் தந்தை அமர்ந்திருத்தல், லிங்கத்தை விசாரசர்மர் பூஜித்தல், விசாரசர்மர் மழுவால் வெட்ட தந்தை கீழே விழுதல் ஆகிய காட்சிகள் சிறிய சிற்பங்களாக இடம்பெற்றுள்ளன. கதை முழுவதையும் சிறிய சிற்பங்கள் வாயிலாகக் காட்டி, சண்டேச பெரும் பதம் பெற்ற காட்சியை மட்டும் மிகப் பெரிய அளவில் கோஷ்ட மாடத்தில் காட்டியுள்ளது தனிச்சிறப்பாகும்.

உலக அளவில் கலை வல்லோரை ஈர்த்த ஒப்பரும் படைப்பு இது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தாராசுரம், மேலக்கடம்பூர், திருநாவலூர் போன்ற திருக்கோயில்களிலும் சண்டேஸ்வரர் புராணத் தொகுப்புக் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும்போது கங்கைகொண்ட சோழபுரத்துப் படைப்பேமுதலிடம் வகிப்பதாகும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post சண்டீசர் சூடிய மாலை appeared first on Dinakaran.

Related Stories: