மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி

மாணிக்ய மகுடாகார ஜானுத்வய விராஜிதா இதற்கு முந்தைய நாமமான “காமேஸ ஜ்ஞாத ஸௌபாக்ய மார்தவ ஊரு த்வய அந்விதா’’ என்பதில் அம்பிகையினுடைய ஊரு த்வய… என்கிற தொடைப்பகுதியுடைய வர்ணனை இருந்தது. அதைப் பார்க்கும்போதுதான் அம்பிகையினுடைய கருணை மற்றும் அனுக்கிரகம் என்பது எவ்வளவு மென்மையானது, அதேநேரத்தில் அது எவ்வளவு வலிமையானது என்று பார்த்தோம். மேலும், மென்மையும் வலிமையும் சேர்ந்திருப்பது என்பது ரகசியம். அந்த ரகசியத்தை காமேஸ்வரர் மட்டுமே அறிவார் என்றும் பார்த்தோம்.

இப்போது இந்த நாமவானது “மாணிக்ய மகுடாகார ஜானுத்வய விராஜிதா…’’ இந்த நாமாவில் அம்பிகையினுடைய முழங்கால் பகுதியை வர்ணிக்கிறது. அந்த முழங்கால் பகுதியை சொல்லும்போது, வசின்யாதி வாக் தேவதைகள் அதற்கொரு உவமை சொல்கிறார்கள். அதாவது, மாணிக்ய மகுடம் என்கிறார்கள். கிரீடத்தை மகுடம் என்று சொல்லுவோம். கிரீடத்தின் வடிவத்தைப் பொறுத்து நிறைய பேர்கள் இருக்கின்றன. இதற்கு முன்னால் சற்றே தொடக்கத்தில் அம்பிகையின் கிரீட வர்ணனையில் பார்த்திருக்கிறோம். தலையை மட்டுமே மறைக்கும் மகுடம். கேசப்பகுதியை மட்டும் மறைக்கும் மகுடம் போன்றவையெல்லாம் அந்த கிரீடத்தில் இருக்கக் கூடிய வர்ணனைகளாகும்.

இப்போது இந்த இடத்தில் மாணிக்க மகுடம். மகுடம் என்கிற அந்த கிரீடத்தினுடைய லட்சணம் என்னவெனில் எதுவொன்று தலைப்பகுதியை முழுமையாக மறைக்கின்றதோ அதற்குத்தான் மகுடம் என்று பெயர். இப்போது மாணிக்க மகுடம் என்றால், மாணிக்கத்தால் ஒரு மகுடம் செய்தால் அது எப்படி சிவந்த நிறத்தில் ஒளிருமோ… அதுபோல, அம்பிகையானவள் லலிதா திரிபுரசுந்தரியாக அமர்ந்திருக்கும்போது அந்த முழங்கால் பகுதியைப் பார்த்தால் நல்ல செக்கச் செவேல் என்று இருக்கின்றது. அந்தச் சிவப்பு எப்படி இருக்கிறது என்றால், மாணிக்கத்தால் ஒரு மகுடம் சார்த்தினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது முழங்கால்கள் என்று வசின்யாதி வாக் தேவதைகள் இந்த நாமத்தில் சொல்கிறார்கள்.

மேலே சொன்னது இந்த நாமத்தினுடைய நேரடியான அர்த்தம்சரி, இந்த நாமத்தை கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், வர்ணிக்கக் கூடியதென்னவோ முழங்கால்கள். ஆனால், அதற்கு அவர்கள் சொல்லக் கூடிய உவமை என்னவென்று பார்த்தால், தலையில் அணியக் கூடிய மகுடத்தை உவமையாகச் சொல்கிறார்கள். வர்ணிக்கக் கூடிய பகுதியோ முழங்கால்கள்… ஆனால்,அந்தப் பகுதிக்கான உவமையை மாணிக்கக் கல் போன்ற முழங்கால்கள் என்றுகூட சொல்லியிருக்கலாம். மாணிக்க ரத்தினம் போன்ற சிவந்த என்றுகூட சொல்லி விட்டிருக்கலாம். ஆனால், இங்கு மாணிக்க மகுடம்… மாணிக்க கிரீடம் என்று சொல்வதன் அவசியம் என்ன? ஏனெனில், தலையில் அணியக்கூடிய ஆபரணத்தைக் கொண்டுபோய் ஏன் முழங்கால்களோடு சம்மந்தப்படுத்தனும். அப்போது இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கவேண்டுமல்லவா?

நாம் பொதுவாக ஏன் கிண்டலாகவே, பழமொழி ஒன்று சொல்வார்கள். சம்மந்தமில்லாத இரண்டு விஷயங்களை நாம் சம்மந்தப்படுத்தினோம் என்றால், அதற்கு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் என்று சொல்வார்கள்.ஆனால், இங்கு பார்த்தால் வசின்யாதி வாக் தேவதைகள் என்ன செய்கிறார்கள் எனில், தலையில் அணியக் கூடிய மகுடத்தைக் கொண்டு வந்து முழங்காலுக்கு உவமையாக்குகிறார்கள். அப்போது இதில் என்ன சூட்சுமம். ஏன் இதைச் செய்கிறார்கள் என்று பார்த்தால், இதில் ஒரு சூட்சுமம் இருக்கின்றது. நம்முடைய உடலை நான்கு பகுதிகளாக பிரிக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அதில் முதல் பகுதி என்பது பாதத்திலிருந்து முழங்கால் வரை இருப்பதாகும். அடுத்து இரண்டாவதாக, முழங்கால் முதல் இடுப்பு வரையிலும் இரண்டாவது பாகம். இடுப்பிலிருந்து கழுத்து வரையிலும் இருப்பது மூன்றாவது பாகம். கழுத்திலிருந்து தலை வரை இருப்பது நான்காவது பகுதி. இப்போது நம்முடைய உடலை நான்காவதாக பிரிக்கும்போது, இப்போது இதில் முழங்காலைப்பற்றிச் சொல்லும்போது, அம்பிகையினுடைய முதல் பாகமாக இருக்கிற அதாவது பாதத்திலிருந்து முழங்கால் வரையிலும் இருக்கக்கூடிய அந்தப் பகுதியாகும். மேலிருந்து பார்த்தால், இதுவே நான்கு பாகங்களில் கடைசி பாகமாகும்.

அதாவது கடைசியாக இருக்கக்கூடிய உறுப்பு என்னவெனில் முழங்கால். இப்போது இப்படிப் பார்ப்போம். இந்த முழங்காலோடு தொடங்கினால் முதல் பாகம் முடிந்து விடுகின்றது.இப்போது நாம் இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது என்னவெனில், மாணிக்க மகுடாகாரம் என்று சொல்லும்போது நாம் எதை சமன் செய்து பார்க்க வேண்டுமெனில் புருஷ சூக்தத்தில் ஒரு ஸ்லோகம் வருகின்றது.பாதோஸ்ய விஶ்வா பூதானி த்ரிபாதஸ்யா அம்ருதம் திவித்ரிபாதூர்த்வ உதைத்புருஷ பாதோஸ்யேஹா பவாத்புனஹபிரம்மமானது நான்கு பகுதிகளாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், ஒரேயொரு பகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த பிரபஞ்சத்தினுடைய எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறது. மீதி மூன்று பகுதிகள்… “த்ரிபாதஸ்யா அம்ருதம் திவி…’’ அம்ருதமயமான அமிர்தத்தில் எப்போதும் மறைக்கப்பட்டிருக்கிறது. “த்ரிபாதூர்த்வ உதைத்புருஷ…’’

மூன்று பகுதிகள் அதனுடைய வெளிப்படாத தன்மையில் மறைக்கப்பட்டுவிட்டு, “பாதோஸ் யேஹா பவாத் புனஹ…’’ ஒரேயொரு பகுதியினால் மட்டும் இந்தப் பிரபஞ்சத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்று புருஷ சூக்தம் சொல்கின்றது. அதாவது, ஒரே ஒரு கால் பகுதியினால் மட்டுமே… நான்கு கால் பகுதிகளில் ஒரேயொரு கால் பகுதியினால் மட்டுமே இந்த மொத்த பிரபஞ்சத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்று புருஷ சூக்தம் சொல்கிறது.
இந்த நாமாவில் இந்த முழங்கால் பகுதி என்பது நாம் கண்களால் பார்க்கக் கூடிய சிருஷ்டியான கால் பகுதியே ஆகும். இந்தக் கால் பகுதி என்பதுஅம்பிகையினுடைய பாதத்திலிருந்து முழங்கால் வரைக்குமானதாகும். இதற்கு முன்னால் நாம் பார்த்த எல்லாமே நம்மால் உணர முடியாத முக்கால் பகுதி. இன்னும் விரிவாகச் சொல்லப்போனால், கேசத்திலிருந்து தொடங்கி இடுப்பு, தொடைப்பகுதிகள் வரையிலான எல்லா வர்ணனைகளுமே ரகசியமானதாகும். முக்கியமாக, இதற்கு முந்தைய நாமத்தில் காமேஸ்வரருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஆனாலும், அவர் சொல்வதில்லை என்று பார்த்தோம். ஆக, இதற்கு முன்னால் நாம் பார்த்த முக்கால் பகுதி இருக்கிறதல்லவா… அந்த ரகசியமானது காமேஸ்வரருக்கு மட்டும்தான் தெரியும். அந்த முக்கால் பகுதியானது அம்ருதத்துவத்தில் இருக்கிறது. ஆனால், இப்போது இந்த முழங்காலிலிருந்து பாதம் வரைக்கும் பார்க்கப் போகிறோம் அல்லவா… இந்த முழங்கால் முதல் பாதம் வரைக்கும் இருக்கக் கூடிய பகுதி என்னவென்று கேட்டால், நாம் கண்ணால் காணக்கூடிய இந்த பிரபஞ்ச சிருஷ்டி. நாம் எதையெல்லாம் கண்ணால் காண்கிறோமோ. நாம் எதையெல்லாம் மிகமிக உயர்ந்தது என்று இந்த சிருஷ்டி என்று நினைக்கின்றோமே… எதெல்லாம் மாணிக்க மகுடம் என்று நினைக்கின்றோமே… அதாவது எதுவொன்று highest… மகுடமாக கிரீடமாக நினைக்கின்றோமோ அது எல்லாமே அம்பிகையினுடைய முழங்கால் அளவுக்குத்தான். இங்கு நாம் கண்ணால் காண்பவை. உணர்பவை. அனுபவிப்பவை… என்று எதையெல்லாம் உயர்வாக மகுடம்போன்று நாம் நினைக்கின்றோமே அவை அனைத்தும் அம்பிகையின்முழங்கால் அளவிற்குத்தான்.

மீண்டும் சொல்கிறேன்… நாம் எதையெல்லாம் மாணிக்க மகுடம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ… அதெல்லாம் அம்பாளின் முழங்கால் அளவுக்குத்தான். அந்த முழங்காலுக்கு மேல் இன்னும் மூன்று பகுதிகள் இருக்கிறது. புருஷ சூக்தம் சொல்லும், “த்ரிபாதூர்த்வ உதைத்புருஷ பாதோஸ்யேஹா பவாத்புனஹ’’ என்பதில் “பாதோஸ்யேஹா பவாத்புனஹ…’’ என்பதைத்தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னால் நாம் பார்த்த எல்லா வர்ணனையெல்லாமும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிற முக்கால் பகுதி. அதாவது…“பாதோஸ்ய விஶ்வா பூதானி த்ரிபாதஸ்யா அம்ருதம் திவி
த்ரிபாதூர்த்வ உதைத்புருஷ…’’

அதனால்தான் இதற்கு முந்தைய நாமத்தில் ஏதோ இதை நாம் தெரிந்து கொண்டதால் ஏதோ இந்த ரகசியங்களெல்லாம் தெரிந்துவிட்டது என்று அர்த்தம் கிடையாது. அந்த முக்கால் பகுதியான ரகசியம் அந்த காமேஸ்வரருக்கு மட்டும்தான் தெரியும்.இங்கு கேள்வி ஒன்று வருகின்றது. ஒரு சாதகன் மேலான நிலையை அடைய வேண்டும். இந்த மேலே சொன்ன பொருள் சாதகனை discourage செய்வது போல் இல்லையா… நீ என்ன தெரிந்து கொண்டாலும் அது முழங்கால் அளவுக்குத்தான் என்பது அவனை அவநம்பிக்கை ஏற்படுத்துவதுபோல்இல்லையா? இல்லை. நிச்சயமாக இல்லை.ஒரு தாய் நின்று கொண்டிருக்கும்போது, ஒரு குழந்தை தவழ்ந்து வந்து ஒருவரின் முழங்காலை பிடித்துக் கொள்கிறது. பாதத்தை பிடித்து மேலே ஏற முயற்சி செய்கின்றது. தாயின் முழங்கால் வரையிலும் தன்னுடைய பலத்தை பிரயோகப்படுத்த பார்க்கின்றது. அதற்குமேல் தாய் பொறுமையாக இருப்பாளா… சட்டென்று அந்தக் குழந்தையை தூக்கிவிடுவாள். அப்போது நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோமே அதெல்லாம் முழங்கால் வரைக்கும்தான் என்பதற்கு என்ன காரணமெனில், நம்முடைய இந்த சாதனை… நம்முடைய இந்த பலத்தை பிரயோகம் செய்து செய்கிற இந்த சாதனை என்பது முழங்கால் வரையிலும் பிடித்து பிடித்து ஏறுகிற மாதிரிதான். அதற்குமேல் அந்த சத்திய வஸ்து நம்மை தூக்க வேண்டுமென்று முடிவு செய்தால் சட்டென்று தூக்கிவிடும். அவ்வளவுதான். அப்போது இது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதல்ல.

தாயார் எப்போதுமே குழந்தையானது பலத்தை பிரயோகம் செய்து மேலே வரட்டும் என்று பார்த்துக்கொண்டு சும்மாயில்லாமல்… சட்டென்று மேலே குழந்தையை தூக்குவதுபோல நம்மை அம்பிகையானவள் சட்டென்று மேலே தூக்கி வைத்துவிடுவாள். அதனால், நம்முடைய எல்லையை அறிந்து அமைதியாக இருந்தால் அம்பிகையே அருளால் அனைத்தும் செய்வாள். நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் முடிந்த செயலையும் நினைத்துப் பார்த்தால் எங்கிருந்து எங்கு வந்திருக்கிறோம். எத்தனை நல்லது இருக்கின்றது என்று புரிந்து கொள்வோம். உலகியலில் இருக்கக்கூடிய தாய்க்கும் குழந்தைக்குமே இப்படியொரு பந்தம் இருக்கும்போது, பிரபஞ்சத்தையே இயக்கும் ஜகன்மாதாவாக இருக்கும் அம்பிகையாக இருக்கும்போது… நாம் ஒரு சாதனை செய்தால் அது அம்பிகையினுடைய முழங்கால் அளவுக்கு இருக்கட்டுமே அதனால் என்ன? அதற்குமேல் தூக்கி விடுவதற்கு நமக்கு அம்மா இருக்கிறாள் அல்லவா… என்ன சாதனை செய்தாலும் முழங்கால் அளவுக்குத்தான் நானா… என்று அவநம்பிக்கை அடைவதற்கு ஒன்றுமில்லை.

நாம் எந்த அளவுக்கு சாதனை செய்கிறோம் என்கிற அளவே கிடையாது. குரு வேண்டுமானாலும் சொல்லலாம். நம்மால் இதற்கு முந்தி என்ன சாதனை செய்திருக்கிறோம் என்று தெரியாது. இப்போது செய்து கொண்டிருக்கிறோமே… இன்னும் நாம் சாதனையை தீவிரமாக்க வேண்டுமா என்றெல்லாம் நமக்கு ஒன்றுமே தெரியாது. சாதனையிலும் நம் முயற்சியைத் தவிர அம்பிகையின் முயற்சிதான் இருந்தது என்பது அம்பிகை தூக்கி வைத்துக் கொள்ளும்போதுதான் நமக்கு தெரிய வரும். குழந்தைபோல் நடந்து வந்து நிற்போம். அதற்குமேல் அம்பிகையான அம்மா தூக்கிக் கொள்வாள் அவ்வளவுதான். இந்த நாமத்திற்கான கோயிலே மடப்புரம் காளியாகும். இங்கு திறந்த வெளியில் நின்ற நிலையில் உள்ளாள். நீங்கள் ஓடிப்போய் அருகே நின்றாலே காளியின் முழங்கால் அளவுக்குத்தான் இருப்பீர்கள். ஏனெனில், அத்தனை பிரமாண்டமானது. காளி எனும் திருப்பெயரில் காருண்யத்தோடு விளங்குகிறாள்.

அந்த பிரமாண்டத்திற்கு முன்பு நாமெல்லாம் ஒன்றுமில்லை என்பதே இந்த நாமத்தின் சாராம்சமாகும். காளி இத்தலத்தில் வலக்கையில் பற்றிய திரிசூலம் கீழ்நோக்கியவாறு அநீதியை அழிப்பதாகவும், தலையில் சூடியஅக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் சாம்பலாக்குவதாகவும் உள்ளது. காளிக்கு பின்றம் 13 அடி உயர பெரிய குதிரை சிலை ஒன்று உள்ளது. குதிரை காளிக்கு நிழல் கொடுக்கும் விதமாக தன் பின்னங்கால்களை கீழே ஊன்றி முன்னங்கால்களை தூக்கி காளியின் இரு புறங்களில் உள்ள பூதகணங்களின் தோள்கள் மீது வைத்துள்ளன. இங்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு, காளிக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.இத்தலம் சிவகங்கை மாவட்டத்தின், திருப்புவனம் வட்டத்துக்கு உட்பட்ட மடப்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இது மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

The post மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி appeared first on Dinakaran.

Related Stories: