தண்ணீர்… தண்ணீர்…

தண்ணீர் இறைவனின் ஓர் அருட்கொடை.மழையை இறைவனின் அருளாக வர்ணிக்கும் திருவசனங்கள் குர்ஆனில் நிறைய உள்ளன. அந்த மகத்தான அருட்கொடையை விரயம் செய்யக்கூடாது எனும் வழிகாட்டுதல்களும் தரப்பட்டுள்ளன.“தண்ணீர் நிறைந்து ஓடும் ஆற்றில் நீங்கள்அங்கத் தூய்மை செய்வதாக இருந்தாலும் தேவைக்கு மேல் தண்ணீரைச் செலவழித்து விரயம் செய்யாதீர்கள்” என்பது நபிகளாரின் நன்மொழி.“இறைத்தூதர் அவர்களே, இறந்துவிட்ட என் தாயாரின் நினைவாக ஏதேனும் ஒரு நற்செயல் செய்ய விரும்புகிறேன். என்ன செய்யலாம்?” என்று ஒரு தோழர் நபிகளாரிடம் கேட்டபோது, “மக்களுக்குக் குடிநீருக்கான ஏற்பாடு செய்” என்று நபிகளார்கூறினார்கள்.

அந்த அளவுக்கு உயர்வான புண்ணிய நற்செயல் அது. ‘தவித்த வாய்க்குத் தண்ணீர் வழங்குவது’ சிறந்த அறம் அல்லவா?தாகத்தால் தவித்த ஒரு நாய்க்குத் தண்ணீர் புகட்டியதால் ஒரு விபச்சாரியின் பாவங்களை இறைவன் மன்னித்து அருளினான்என்பதும் நபிமொழி.தண்ணீர் போன்ற இயற்கை வளங்கள் மீது யாரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது. இறைவன் கேட்கிறான்-“இவர்களிடம் கேளுங்கள். “உங்கள் (கிணறு, ஆறு ஆகியவற்றின்) நீர் பூமிக்குள் போய்விட்டால் பிறகு தண்ணீர் ஊற்றுகளை உங்களுக்கு வெளிக்கொணர்பவன் யார் என்பதை நீங்கள் எப்போதேனும் சிந்தித்தது உண்டா?” (குர்ஆன் 67:30)எத்துணை ஆழமான கேள்வி.

ஆயிரம் அடிகள் தோண்டிய பிறகும் கூட தண்ணீர் கிடைப்பதில்லை என்கிற நிலை இன்றைக்கு உருவாகி விட்டது. தண்ணீர் எனும் இயற்கை வளம் நமக்குத் தடையின்றிக் கிடைக்க வேண்டுமானால் முதலில், தண்ணீர் இறைவனின் அருட்கொடை எனும் உணர்வு நமக்கு இருக்க வேண்டும்.அடுத்து, எந்த நிலையிலும் தண்ணீரை விரயம் செய்யக்கூடாது எனும் பொறுப்பு உணர்வு வேண்டும்.மூன்றாவதாக, மணல் கொள்ளை போன்றவற்றை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.

நான்காவதாக, நம் செயல்களை சுயமதிப்பீடு செய்து இறைவனிடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். பாவங்களிலிருந்து விலகி இருந்தால் இயற்கை வளங்களைப் பெருகச் செய்வேன் என்பது இறைவன் அளிக்கும் வாக்குறுதி.“உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கிறான். (அவ்வாறு மன்னிப்புக் கோரினால்) அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்.” (குர்ஆன் 71:10-12) நம்முடைய நதிநீர் உரிமைகளுக்காக சட்டரீதியாகப் போராடலாம், உரிமைக்குரல் எழுப்பலாம், தப்பில்லை. அதே சமயம் நம் செயல்களை சுயமதிப்பீடு செய்து, இறைவன் பக்கமும் திரும்ப வேண்டும். ஏனெனில் – இயற்கை வளங்களின் பொத்தான் இந்த உலகைப் படைத்த தலைமை நீதியாளனின் கையில் இருக்கிறது.

– சிராஜுல் ஹஸன்

The post தண்ணீர்… தண்ணீர்… appeared first on Dinakaran.

Related Stories: