ஸ்ரீ ஸாயி கராவலம்பம்!

‘‘ஒரு பக்தன் விழும் நிலையிலிருந்தால் நான் நான்கு அல்லது பல கரங்களை ஒரே நேரத்தில் நீட்டி அவனைக் காக்கிறேன், அவனை விழ விட மாட்டேன்’’ பாபாவின் திருமொழி. இது தான் ‘கராவலம்பம்’ என்பது. அதாவது, ‘நம்மை திருக்கை கொடுத்துத் தாங்குவதாகும்’.

தம்முடைய பணிக்கு பாபாவாலேயே விசேஷமாக வரவழைக்கப்பட்டவர் நானா சாஹேப் சாந்தோர்கர். முழுமையாக தம்மிடம் சரணடைந்த நானாவின் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பாபா பொறுப்பு ஏற்று அற்புதங்கள் செய்கிறார். பாபாவின் கண்காணிப்பு, கவனிப்பு, வேண்டுவன அளிப்பது எல்லாம் நானாவிற்கு முழுமையாகக் கிடைக்கிறது.தமிழில் ஸாயிபாபா புராணம் பாடிய புலவர். சு. நல்லசிவம் பிள்ளை நானாவிற்கு பாபா செய்த அற்புதங்களை 118 பாடல்களில் விவரித்துப் பாடுகிறார்.

ஒரு தெய்வீக சக்தி சாதாரணமானது, முக்கியமானது என எல்லா வினைகளையும் ஒரே அளவில் கவனித்து அதில் வெற்றி பெறச்செய்து மகி்ழ்ச்சி கொள்ள வைக்கிறது. எனவே, அந்த சக்தியின் கண்காணிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கிறோம் என்ற உணர்வே சரணாகதியின் மகத்துவம். அவ்வகையில், பாபா நானாவின் மகள் மீனாதாயிக்கு நிகழ்த்திய ஜாம்நேர் அற்புதத்தின் மூலம் அவ்வருட்சக்தியின் மகத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.

1904 ஆம் ஆண்டு நானா சாந்தோர்கர் சீரடியிலிருந்து நூறுமைல்களுக்கு அப்பால் உள்ள கான்தேஷ் ஜில்லாவிலுள்ள ஜாம்நேரில் துணை ஆட்சியராக இருந்தார். கர்ப்பவதியான அவருடைய மகள் மீனாதாயி பிரசவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய பிரசவம் தாங்கமுடியாத கஷ்டமாக இருந்தது. நானா என்ன செய்வார்? பாபா எல்லாம் அறிவார். தாம் அவருக்கு கடிதத்தின் மூலமோ, தந்தியின் மூலமோ இவ்விஷயத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அங்கிருந்தே நானா பாபாவை நினைத்து அவரின் உதவியைத் தொழுது வேண்டினார்.

அதே வேளையில் சீரடியில் ‘பாபுகீர்புவா’ என்று பாபா கூப்பிடும் ‘இராம்கீர்புவா’ என்பவர் கான்தேஷில் உள்ள தம் சொந்த ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். பாபா அவரைக் கூப்பிட்டு, அவர் வீட்டுக்குப் போகும் வழியில் உள்ள ஜாம்நேரில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு செல்லுமாறும், நானாவிடம் உதியையும், ஆரத்திப் பாடலையும் கொடுத்து விட்டுச் செல்லும் படியும் கூறினார். இராம்கீர்புவா தன்னிடம் இரண்டு ரூபாய் மட்டும் இருப்பதாகவும் அது ஜல்காவ் வரை இரயில் கட்டணத்திற்கு மட்டுமே சரியாகி விடும் என்றும், ஜல்காவில் இருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள ஜாம்நேர் வரை போவது தன்னால் இயலாது என்றும் கூறினார்.

இதற்கு பாபா, ‘நீ போ, உனக்குத் தேவையானது கிடைக்கும்’ என்று கூறினார். பின்னர், மாதவ் அட்கரால் எழுதப்பட்ட ஆரத்திப்பாடலை ஷாமாவிடம் எழுதச் சொல்லி அதன் பிரதியை இராம்கீர்புவாவிடம் கொடுத்து, நானாவிடம் கொடுக்கும்படி பாபா கூறினார்.இராம்கீர்புவா ஜல்காவை அதிகாலை இரண்டு மணியளவில் அடைந்தார். அப்போது அவரிடம் இரண்டு அணா மட்டுமே இருந்தது. திடீரென வந்த ஒரு சர்க்கார் சேவகன் (டவாலி) அவர் முன் வந்து, ‘யார் சீரடியைச் சேர்ந்த பாபுகீர்புவா’ என்று கேட்டான். பாபுகீர் அவனிடம் தம்மை அறிமுகம் செய்து கொள்ள, அவன், தான் நானா சாஹேபிடமிருந்து வருவதாகவும் அவருடைய வேலையாள் என்றும் கூறி, நல்ல ஜோடிக்குதிரைகளுடன் கூடிய ஒரு பிரமாதமான வண்டியின் சமீபம் அழைத்துச் சென்றான்.

அவர்கள் இருவரும் அதில் பிரயாணம் செய்தார்கள். வண்டி வேகமாக ஓடியது. அதிகாலையில் அவர்கள் ஓடைக்கரையொன்றை அடைந்தனர். சேவகன் இராம்கீர்புவாவை சிறிது உணவு உட்கொள்ளுமாறு கூறினான். அவனுடைய தாடி, மீசை இவைகளையெல்லாம் பார்த்துவிட்டு, அவனிடமிருந்து உணவைப் பெறுவதற்குச் சிறிது தயக்கம் காட்டினார் இராம்கீர்புவா. ஆனால் அவனோ நான் கார்வாலைச் சேர்ந்த சத்ரியன் என்றும், நானாதான் இந்த உணவை கொடுத்து அனுப்பியதாகவும் அதனால் ஏற்றுக் கொள்வதில் எவ்வித கஷ்டமோ, சந்தேகமோ வேண்டியதில்லையென்றும் கூறினான்.

பின்னர் அவர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் பிரயாணத்தைத் தொடர்ந்தனர். பொழுது விடியும் போது ஜாம்நேரை அடைந்தனர். இராம்கீர்புவா இயற்கைக் கடன் கழிக்கச் சென்று சில நிமிடங்களில் திரும்பி வந்தார். அப்போது சேவகன், குதிரை வண்டி, வண்டியோட்டி யாரையும் காணவில்லை.பின்னர் அருகிலுள்ள கச்சேரிக்குச் சென்று விசாரித்து நானா வீட்டில் இருப்பதை அறிந்து கொண்டார் இராம்கீர்புவா. நானா வீட்டுக்குச் சென்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பாபா தந்த உதியையும் ஆரத்தியையும் கொடுத்தார். நானாவின் மனைவி பாபாவின் உதியை தண்ணீரில் கரைத்துக் கொடுத்தாள். பாபாவின் உதவி தக்க சமயத்தில் கிடைத்ததென எல்லோரும் நினைத்தனர். சில நிமிடங்களில் மீனாதாயியின் கண்டம் கடந்து சுகமான பிரசவத்தில் குழந்தை பிறந்தது.

இராம்கீர்புவா நானாவிற்கு சேவகன், வண்டி, சாப்பாடு முதலியவற்றுக்கு நன்றி சொன்ன போது நானா மிகவும் ஆச்சரியப்பட்டார். ஏனெனில், அவர் ஸ்டேஷனுக்கு ஒருவரையும் அனுப்பவில்லை. சீரடியில் இருந்து ஆள் வருவதும் அவருக்குத் தெரியாது.சீரடியை விட்டுப் புவா புறப்படும்போது, ‘நீ போ உனக்குத் தேவையானது கிடைக்கும்’ என்று பாபா கூறியதன் திருவாய் மொழியைப் புரிந்து கொண்டார். நானாவின் குடும்பத்தினரிடம் எந்த அளவுக்கு பாபா அக்கறை கட்டினார் என்பதையும், வெகு தொலைவில் மருத்துவ வசதி இல்லாத ஜாம்நேரில் பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு உதவியது பாபாவின் கருணை என்பதையும் இவ்வதிசய நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

வண்டி, குதிரை, சேவகன், சாப்பாடு எல்லாவற்றையும் அனுப்பி வைத்தது பாபாவின் அசாதாரணமான சக்திகளே. அவைபற்றி நானா எதுவும் அறிந்திருக்கவில்லை. பாபா தம் சக்தியால் எல்லாவற்றையும் தோற்றுவித்தாரா அல்லது தானே அவைகளாக உருக்கொண்டு பக்தனுக்கு அருள்பாலித்துப் பின் மறைந்தாரா?

பிருந்தாவனத்தில் பிரம்மதேவர் தம் ‘மாயை’யைக் கைக்கொண்டு கன்றுக் கூட்டங்களையும், அவற்றை மேய்த்த இடைச் சிறுவர்களையும் காணாமல் போகும்படிச் செய்தார். ‘இது பிரம்மாவின் வேலை’ என்பதை அறிந்த கண்ணன், அவனே கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் உருமாறினான்.‘‘நீரே மாயையினால் கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் மாறி, உறி, பாத்திரங்கள், குழல்கள், கொம்புகள் இவைகளின் உருவத்தையும் ஏற்று முன்போலவே வனத்தில் வெகு நேரம் பலவாறாக விளையாடிய பிறகு மாலையில், அவர்களுடன் சேர்ந்து கோகுலத்திற்குத் திரும்பி வந்தீர்” என்று ஸ்ரீ மத் பாகவத நிகழ்ச்சியை, தன்னுடைய ‘ஸ்ரீ மந் நாராயணீய’த்தில் நாராயண பட்டதிரி பாடுகிறார் (52வது தசகம், 3ஆம் ஸ்லோகம்) ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பதை படம் பிடித்துக் காட்டுகிறார் நாராயண பட்டதிரி.

‘‘அப்படி கன்றுகளாகவும் சிறுவர்களாகவும் மாறிய நீர் உம்மையே கூட்டிக் கொண்டும், எடுத்துக் கொண்டும், பல வடிவில் சென்றபொழுது தாய்மார்களாலும், கன்றுகளின் தாய்களான பசுக்களாலும், எப்பொழுதும் இல்லாத மகிழ்ச்சியுடன் நீர் வரவேற்கப்பட்டவரானீர்’’ இப்படி ஓர் ஆண்டுக் காலம் வரை கோகுலச் சிறுவர்களாகவும், கன்றுகளாகவும் கண்ணனே இருந்து கோபியர்களின் அன்பைப் பெற்றார். அப்படிப்பட்ட கோபியர்களும் திருவருளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

ஒரு வருடத்திற்குப் பிறகு, கோகுலத்தில் சிறுவர்களும், கன்றுகளும் இருப்பதைக் கண்ட பிரம்மதேவர் மயங்கிய பொழுது, புதிய உருவங்கள் ஒவ்வொன்றும் கண்ணன் வடிவமாகக் காட்சியளிக்கக் கண்டு நாணமுற்று வருந்தினார். ‘‘பெருமானே! உமது ‘மாயை’யை என்னால் அறிய முடியவில்லை. அகந்தையினால் உம்மை சோதிக்க முயன்றேன். என் தவறைப் பொறுத்தருள்க. பக்தி மார்க்கத்தால் அடையும் ஞானத்தைத் தவிர வேறு எவ்விதத்திலும் உம்மை அறிவது இயலாது” என்று பிரமதேவர் கண்ணனைப் பணிந்து வணங்கி தமது உலகம் திரும்பினார். இது பாகவதம் காட்டும் அற்புதப் பாடம்.

‘‘விபுத்ய பக்த்யா ஏவ கதோபநீதயா ப்ரபேதிரே அஞ்ஜ: அச்யுத தே கதிம் பராம்’’ – ஒருநாளும் அழிவில்லாத ஹே கிருஷ்ணா! பக்தியொன்றாலேயே ஞானத்தையடைந்து, தங்கள் லீலைகளை சிந்தித்து, தங்களையே சரணடைந்து, மிக எளிதாக உத்தமமான தங்கள் பதவியை அடைந்தார்கள் (ஸ்ரீ மத் பாகவதம், ஸ்கந்தம் 10, அத்தியாயம் 14, ஸ்லோகம் 5). இது வியாசரின் பக்தி வாக்கியம்.
பாபாவின் ஜாம்நேர் அதிசயத்தையும் மத் பாகவதத்தின் கோகுலலீலை அற்புதத்தையும் இணைத்துப் பாடுகிறார் ஸ்ரீ

ஸாயிபாபா புராணம் தந்த புலவர்
நல்லசிவம் பிள்ளை.
‘‘மலரவன் முன்னாள் மாயனை இகழ்ந்து
மற்றவன் மேய்த்த ஆன் கன்றை
நலனுள ஆயர் சிறுவரைக் கவர்ந்து
நாள்பல கரந்து வைத்தது கண்டு
உலகில் ஆன் கன்றாய் ஆயர்தம் மகராய்
ஆழிசூழ் புவி அதிசயிப்ப
அலரவன் சமழ்ப்ப ஆற்றிய கண்ணன்
ஆவர் இச்’சாயி’யே யன்றோ’’

(ஸ்ரீ ஸாயிபாபா புராணம், 95 ஆம் பாடல்; கரந்து-மறைத்து; சமழ்ப்ப-வெட்க மடைதல், வருந்துதல்) முன்னாளில் பிரம்மன் கண்ணனை இகழ்ந்து அவன் மேய்த்த பசுக்கன்றுகளையும் இடைச் சிறுவர்களையும் கவர்ந்துசென்று பல நாள் மறைத்து வைத்ததைக் கண்டு கடல் சூழ்ந்த பூமியில் உள்ளோர் அதிசயிக்கவும் பிரம்மன் நாணமடையவும், பசுக்களாகவும் ஆயர் சிறுவர்
களாகவும் அற்புதம் விளைத்த கண்ணனே இச் சாயி ஆவர். ஏனெனில், நானாவிற்காக சேவகன், குதிரைவண்டி, குதிரை, வண்டியோட்டி, சாப்பாடு என யாதுமாகி நின்று அருள்பாலித்த பாபா கண்ணனேயன்றி வேறு யாராக இருக்கமுடியும்?

‘‘மெய்தரு வேதியனாகி வினைகெட கைதரவல்ல கடவுள் போற்றி’’ என்பது திருவாசகம். தம் பக்தர்களை எங்கும் எப்பொழுதும் காக்கும் திருக்கரங்களையுடைய பகவான் பாபாவிடம் நாமும் ‘‘மம தேஹி கராவலம்பம்’’ (எனக்குத் திருக்கரம் தந்தருள வேண்டும்) என்று பிரார்த்திப்போம்.

முனைவர் .வே.சாந்திகுமார சுவாமிகள்

 

The post ஸ்ரீ ஸாயி கராவலம்பம்! appeared first on Dinakaran.

Related Stories: