உலகியல் ஜோதிடம் உணர்த்துவது என்ன?

ஒரே நேரத்தில் ஒரே நாளில் வெவ்வேறு ஊர்களில் பிறந்தவர்களின் காலப் பலன்கள் ஒன்றாக இருக்கும் என பலர் நம்புகிறார்கள். ஆனால், பலன் அப்படி இருக்காது. இவர்கள் ஜனனம் செய்த ஊர்களுக்கு தகுந்தாற்போல அவர்களின் பயணமும், வாழ்க்கை முறையும், சிந்தனைகளும் வெவ்வேறாக இருக்கும் என்பது உண்மை. இடம் மாறும் பட்சத்தில், மற்ற கிரகங்களின் இயக்கங்களும் மாறுபடுகிறது. உலகியல் ஜோதிடத்தின் அடிப்படையில் மாற்றம் உண்டாகிறது. நாடுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கிரகங்கள் ஆளுமை செய்கின்றன. ஆளுமை செய்கின்ற கிரகங்களுக்கு தகுந்தவாறு அந்த கிரகங்களை பார்வை செய்கின்ற கிரகங்களுக்கு தகுந்தவாறு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான மாறுபாடு ஏற்படுகின்றது. இந்த மாறுபாடுகள் ஏன் என்பதை அறிந்து கொள்ளவும். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு ராசியாக எடுத்துக் கொண்டு, அவற்றின் இயக்கம் ஏற்படுகிறது. இதைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் சொல்வதுதான் உலகியல் ஜோதிடம்.

ஏன் உலகியல் ஜோதிடத்தை அறிந்து கொள்ள வேண்டும்?

ஒரு நபர், வெளிநாட்டிற்கு உத்யோகத்திற்காக செல்கிறார். அவ்வாறு செல்பவருக்கு அவர் செய்கின்ற உத்யோகம் அவருக்கு எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும், அந்த மாற்றம் அவருக்கு வெற்றி தருமா? தோல்வி தருமா? என்பதையும் இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஒரு நபர் வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துடன் இணைந்து ஏற்றுமதி / இறக்குமதி தொழில் செய்ய முயற்சிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருடைய ஜாதகத்தில் ஏற்றுமதி / இறக்குமதி செய்வதற்கான அமைப்புகள் இருந்தாலும், என்ன ஏற்றுமதி / இறக்குமதி செய்யலாம் என்பதையும், எந்த நாட்டுடன் இவர் ஏற்றுமதி / இறக்குமதி செய்தால் லாபம் ஈட்டலாம் என்பதையும் உலகியல்
ஜோதிடத்தின் வழியே கண்டறியலாம். அரசியல் மாற்றங்கள்கூட ஒரு நாட்டில் நிகழும் பட்சத்தில், உலகின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணத்திற்கு, காலம் காலமாக போர்களின் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை மாறுபாடுகள் ஏற்படுகிறது. இந்த விலை மாறுபாட்டால், வளைகுடா நாடுகளில் லாபம் ஈட்டினாலும், அந்த நாடுகள் எங்கு முதலீடு செய்கின்றனவோ, அங்குதான் பொருளாதாரம் வலிமை யடைகின்றன. வெளிநாடுகளின் முதலீடுகள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சுற்றுலாவிற்கும் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதே உண்மை.மேல்படிப் பிற்காக வெளிநாடு செல்லும் ஒரு நபர், அந்த நாட்டில் படிக்கும் படிப்பு அவருக்கு சாதகமாக இருக்குமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளை கொண்டு வந்துவிடுவாரா? என்பதை அவரின் ஜாதகத்துடன் உலகியல் ஜோதிடத்தை ஒப்பிட்டு சொன்னால்தான், அந்த நபர் போகலாமா? வேண்டாமா? என்ற முடிவு செய்ய முடியும்.

உலகியல் ஜோதிடமும் வாழ்வியல் மாறுபாடுகளும்

இந்தியாவில், ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை வைத்துக் கொண்டு, குடும்பம் கட்டமைக்கப்படுகிறது. வெளிநாடுகளில், அந்த கொள்கைகளோ கட்டமைப்புகளோ இல்லை என்பதுதான் வாழ்வியல் மாற்றம். இந்த வாழ்வியல் மாறும்தன்மை, இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. இந்த இடத்திற்கு ஏற்றவாறு உண்ணும் உணவும், பழக்க வழக்கங்களும்கூட மாறுபடுகிறது என்பது நிதர்சனமான உண்மை. பேசும் மொழிகளும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பேசும் மொழி தமிழ் என்றால், டெல்லியில் உள்ளவர்கள் பேசும் இந்தி என்றால், ஆந்திராவில் உள்ளவர்கள் பேசும் மொழி தெலுங்கு என இவ்வாறு மொழியே இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.இந்த மாறுபாடுகளுக்கு என்ன காரணம் என ஆராய்ந்தோமானால், இடம் மாறுபாடுகளால் மொழி, கலாச்சாரம், சிந்தனை, உணவு, பழக்க வழக்கம் என எல்லாம் மாறுபடுகிறது. இடத்தின் மாறுபாடுகளால் அந்த குறிபிட்ட இடத்தை ஆளுமை செய்கின்ற கிரகங்களும் மாறுபடுகின்றன.

ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு கிரகங்கள் ஆளுமை செய்கின்றன. ஆளுமை செய்கின்ற கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் ஒவ்வொருவரின் சுயஜாதகம், நாட்டின் ஜாதகம் என எல்லா அமைப்புகளும் இயங்குகின்றன. ஆளுமை செய்கின்ற கிரகங்களின் மாறுபாடுகளால்தான் இயக்கங்களும் மாறுபடுகின்றன. இவையெல்லாம் ஆய்வுகளுக்கு எடுத்துக் கொண்டு, அவைகளை தொடர்வோமானால், நாம் இன்னும் துல்லியமான பலன்களை அறிவதற்கு வழிவகை செய்யும். உதாரணத்திற்கு, இந்தியாவை ஆள்பவர்கள் வட இந்தியாவிலேயே உருவாவதற்கு காரணம் என்ன சிந்தித்தோமானால், நிலப்பரப்பில் பூமியின் பூமத்திய ரேகைக்கு மேலுள்ள பகுதிகள் வளைந்த மேடாக உயர்ந்து காணப்படுகின்றன.

இங்கு சூரியனின் கதிர் வீச்சுகள் அதிகம் விழுகின்றன. இந்த சூரியனின் கதிர் வீச்சுகள் அதிகம் விழுகின்ற தன்மையினால்தான், ஆந்திராவிற்கு மேல்புறம் செல்லச் செல்ல கோதுமையின் விளைச்சல் அதிகமாக இருக்கின்றன. இந்த கோதுமையின் காரகத்திற்கு காரணமான கிரகம் சூரியன். மேலும், மக்கள் அதையே அதிகம் உணவாக உட்கொள்ளும் பட்சத்தில், சூரியனின் ஆதிக்கம் வட இந்தியாவில் அதிகம் காணப்படுகின்றது. தென்னிந்தியாவில் சந்திரனின் கதிர்கள் அதிகம் விழுவதனால், இங்கு வாழும் மக்கள் நெல் தொடர்பான உணவுகளை உட்கொள்கின்றனர். பொருள் ஈட்டும் திறனில் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்கள் அதிக திறன் உள்ளவர்களாக உள்ளனர். நெல்லின் காரகம் சந்திரன் ஆகும். ஆகவே, இங்கு பொருள் ஈட்டுவதற்காக பலரும் வருகின்றனர் என்பது இயற்கை அமைப்பு என்ற உலகியல் ஜோதிடமே.

ராசிகளும் உலக நாடுகளும்

மேஷம் பிரிட்டன், ஜெர்மனி;
ரிஷபம் போலந்து, ஹாலந்து;
மிதுனம் அமெரிக்கா, கனடா;
கடகம் இந்தியா, நியூசிலாந்து, ஹாலந்தின் மற்றொரு பகுதி;
சிம்மம் பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர்;
கன்னி சுவிட்சர்லாந்து, துருக்கி, பாபிலோன்;
துலாம் பர்மா, சீனாவின் ஒரு சில பகுதி, திபெத்;
விருச்சிகம் ஸ்வீடன், பிரேசில், நார்வே;
தனுசு ஆஸ்திரேலியா, தெற்கு அரபு நாடுகள், ஹங்கேரி;
மகரம் பல்கேரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்;
கும்பம் ரஷ்யா, கொலம்பியா;
மீனம் போர்ச்சுகல், ஸ்பெயின், இலங்கை

இது போன்று இன்னும் ஏராளமான நாடுகள் அந்த நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளும்
ராசி மண்டலங்களுக்கு உட்படுகின்றன.

The post உலகியல் ஜோதிடம் உணர்த்துவது என்ன? appeared first on Dinakaran.

Related Stories: