ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து கடந்த 2022 நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் முருகன், சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி அகதிகள் முகாமில் இருந்தனர். இதனிடையே முகாமில் இருந்த சாந்தனுக்கு கடந்த ஜனவரி 24ம்தேதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாந்தனின் உயிர் காலை 7.50க்கு பிரிந்ததாக மருத்துவமனை டீன் தேரணிராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கை செல்ல சாந்தனுக்கு அந்நாட்டு அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிர் பிரிந்தது.

இது குறித்து பேசிய சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி; சாந்தனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தது. எம்பார்மிங் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன இவ்வாறு கூறினார்.

The post ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: