சென்னை அண்ணாசாலையில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைந்து நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதால் நாளை பிரதமர் மோடி தலைமையில் நடக்க இருந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதேபோன்று, இந்தியா கூட்டணியை சேர்ந்த மாநில முதல்வர்களும் தொடர்ந்து புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள்.

கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூ.12,210 கோடி. ஆனால், தமிழகத்திற்கு சல்லிக் காசு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக ரூ.1992 கோடி ஜி.எஸ்.டி. தொகை வழங்கிய பீகார் மாநிலத்திற்கு வழங்கிய தொகை ரூ.59,000 கோடி. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதியாக கேட்ட தொகை ரூ.37,000 கோடி. ஆனால் வழங்கியதோ ரூ.276 கோடி. இத்தகைய போக்கு கூட்டாட்சி அமைப்பிற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். பாஜ கட்சியின் சார்பாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பதவியேற்ற பிறகு அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக அவர் இருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு மாறாக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், தாராபூர் டவர் முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதேபோன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஒன்றிய அரசின் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

The post சென்னை அண்ணாசாலையில் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: