இனியும் அலோபதிக்கு எதிராக விளம்பரங்களை வெளியிட்டால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் : பதஞ்சலி நிறுவனத்தை விளாசிய உச்சநீதிமன்றம்!!

டெல்லி: பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், அலோபதி மருத்துவத்திற்கு எதிராக தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக தொடரப்பட்ட வழக்கில், அந்நிறுவனத்தை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் பதஞ்சலி நிறுவனத்தை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து கண்டனம் தெரிவித்தது. எந்தவொரு தவறான விளம்பரங்களையும் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. ஆனாலும் உச்சநீதிமன்ற தடையை மீறி அலோபதி மருத்துவமுறைக்கு எதிரான விளம்பரங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகளே கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பதஞ்சலி நிறுவனம் சார்பில் அதிகாரி இன்று ஆஜராக உத்தரவிட்டு இருந்த போதும், யாரும் ஆஜராகவில்லை என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இனியும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டால் பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

The post இனியும் அலோபதிக்கு எதிராக விளம்பரங்களை வெளியிட்டால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் : பதஞ்சலி நிறுவனத்தை விளாசிய உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Related Stories: