சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேனாம்பேட்டையில் ஆய்வுக்கு பின் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மிக கனமழையால் மழைநீர் வடிய கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. மழை பெய்யும்போது தண்ணீர் நிற்பது உண்மை; ஆனால் அவை உடனுக்குடன் வடிகிறது. அம்பத்தூர், கொளத்தூர், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் தேங்கிய நீரை அகற்றும் பணி நடக்கிறது என்று தெரிவித்தார்.
தியாகராயர் நகர், மேற்கு மாம்பலத்தில் தண்ணீர் தேங்கியது ஏன்?:
மேற்கு மாம்பலம், தியாகராயர் நகரில் பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சனையே மழை நீர் தேங்க காரணம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அடையாறு வெள்ளம்-மேற்கு மாம்பலம் கால்வாயில் நீர்:
மாம்பலம் கால்வாயில் இருந்து செல்லும் தண்ணீர் அடையாறில் கலந்துதான் கடலுக்கு செல்லும். செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட நீர் அடையாறில் அதிகமாக வருவதால் மாம்பலம் கால்வாய் தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாம்பலம் கால்வாயில் உள்ள பிரச்சனையை சரிசெய்யும் பணி நடப்பதால் தியாகராயர் நகரில் தேங்கியுள்ள தண்ணீர் வடிகிறது. பெரு மழை பெய்ததால் அந்த நேரத்தில் மட்டும் தண்ணீர் தேங்கியது என்று தெரிவித்தார்.
மழை நீரை அகற்றும் பணியில் 16,000 ஊழியர்கள் தீவிரம்:
தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் 16,000 மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறுகிய நேரத்தில் அதிகனமழை பெய்ததே சில இடங்களில் தண்ணீர் தேங்க காரணம். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் கமாண்டோக்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
The post மழை நீரை அகற்றும் பணியில் 16,000 ஊழியர்கள்!: மிக கனமழையால் மழைநீர் வடிய கொஞ்சம் நேரம் பிடிக்கிறது.. மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.