ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுகிறது 3 நாட்கள் மழை கொட்டும்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை மறுதினம் புயலாக மாற உள்ளது. இதற்கிடையில் சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. வட தமிழக பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை நேரில் செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. தொடக்கத்தில் குறைவான மழையே பெய்தாலும், கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் நாளை மறுநாள் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, மீண்டும் தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அத்துடன் வட இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நேற்று காலையில் இருந்தே நல்ல மழை பெய்தது.

அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 90மிமீ, மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே பரவலாக மழை பெய்தது. சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. சென்னையில் மீனம்பாக்கம், திருவிக நகர், கும்முடிப்பூண்டி, தண்டையார்பேட்டை, அயனாவரம் பகுதிகளில் 50மிமீ மழை பெய்தது. பொன்னேரி, அண்ணா நகர், ராயபுரம், சென்னை துறைமுகம், தேனாம்பேட்டை, கொளத்தூர், பெரம்பூர், நுங்கம்பாக்கம், சோழவரம் பகுதிகளில் 40மிமீ மழை பெய்துள்ளது.

கோடம்பாக்கம், எண்ணூர், மாதவரம், புழல், திருவொற்றியூர், கோடம்பாக்கம், ஐஸ்அவுஸ், மணலி, பெருங்குடி, அடையாறு, மதுரவாயல், கேளம்பாக்கம், ஆலந்தூர், சென்னை விமான நிலையம் அண்ணா பல்கலைக் கழகம் 30மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் பல இடங்களில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது. இது தவிர திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. 21 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை கொட்டியது. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் நேற்று வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்றும், அது மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் டிசம்பர் 2ம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் புயலின் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு அது வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே டிசம்பர் 5ம் தேதி விஜயவாடா வழியாக கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வட தமிழகத்தில் டிசம்பர் 2, 3ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில், வட தமிழகப் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுவதுடன், கடலுக்குள் சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில், புயல் சின்னம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை விட்டு விட்டு பெய்து வந்த மழையானது, நேற்றிரவு முதல் கனமழையாக மாறியது. நேற்று மாலை நேரத்தில் விடாது பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் பெய்த பலத்த மழையால் சுரங்கப் பாதைகள் மழைநீரால் மூழ்கியது. மேலும் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ளம் புகுந்தது.

தொடர் கனமழையால் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி வருகின்றன. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதற்கிடையே தொடர்மழையால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு, வடகிழக்கு பருவமழை தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடாது பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் புகுந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் செல்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்யவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் விரைந்துள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யும் பணிகளையும் வேகப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள், ஊழியர்களை ஆயத்த நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். புகார் மையங்களுக்கு நேரில் சென்று வரக்கூடிய அவற்றை உடனுக்குடன் சரி செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

* 2 மணி நேரத்தில் கொளத்தூரில் 6.2 செ.மீ. மழை
சென்னையில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 2 மணி நேரத்தில் கொளத்தூரில் மட்டும் 6.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அம்பத்தூரில் 5.4 செ.மீ., கத்திவாக்கத்தில் 4.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிண்டி, மயிலாப்பூர், அடையாறு, சைதாப்பேட்டை, எழும்பூர், சென்ட்ரல், ஆவடி, பூவிருந்தவல்லி, தாம்பரம், வண்டலூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

* பாதிப்பு குறித்து புகார் செய்யலாம்
மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு 1070, 1077 என்ற எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வாட்ஸ் அப் வாயிலாக 9445869848 என்ற எண் மூலம் புகார் அளிக்கலாம். கனமழையால் ஏற்படும் எந்த விதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* 5 சுரங்கப்பாதை மூடல்
நேற்றிரவு மட்டும் ஒரு மணி நேரத்தில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளதால் பெரம்பூர் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. அதேபோல் கெங்குரெட்டி, நுங்கம்பாக்கம், துரைசாமி, அரங்கநாதன் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுகிறது 3 நாட்கள் மழை கொட்டும்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: