ஐகோர்ட் உத்தரவுப்படி நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும்

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும் என்று எம்.ஆர்.பி செவிலியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் பணிபுரிந்த எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும், என 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள், தங்களது குழந்தைகளுடன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 3 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

போராட்டத்தின் போது எம்ஆர்பி செவிலியர் அசோசியேஷன் துணைத் தலைவர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா பேரிடர் தொற்றுக் காலத்தில் கடந்த 2020 ஆண்டு, சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிகமான முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் செவிலியர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர். மீதமுள்ள 3 ஆயிரத்து 290 தற்காலிக செவிலியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று அரசிடம் 2021ம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அரசு ஏற்று கொண்டது.

ஆனால், வாக்குறுதியை மீறி 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரவில் எவ்வித முன்னறிவிப்பின்றி எங்களை பணிநீக்கம் செய்தது தமிழ்நாடு அரசு. மேலும் இதனை ரத்து செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுத்தோம். அதன் விளைவாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வேறு வழியின்றி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.

இவ்வழக்கில் கடந்த ஜூலை 12ம் தேதி எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பணி வழங்க வேண்டும். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போராட்டத்தின் போது ஏற்படும் அம்சம்பாவிதங்களுக்கு அரசுத் தான் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஐகோர்ட் உத்தரவுப்படி நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: