ரூ.230 கோடியில் கட்டப்பட்ட கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறக்க ஜூன் 15ல் ஜனாதிபதி முர்மு சென்னை வருகை: கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்

சென்னை: கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள, கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க வரும் ஜூன் 15ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை வருகிறார் என குடியரசு தலைவர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தரை தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது. அதன்படி முதல் கட்டிடமான ஏ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்பளவில் புறநோயாளி சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

பி பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டிடமான சி பிளாக் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து, வருகிற ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதிய மருத்துவமனையை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புதிய மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 28ம் தேதி டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துபேசினார். அப்போது, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தை நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதேபோன்று திருவாரூர் கலைஞர் மெமோரியல், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றின் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழையும் அவரிடம் வழங்கினார். பின்னர் குடியரசு தலைவரிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் உரையாடினார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று ஜூன் 5ம் தேதி சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களும் அரசு சார்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவரின் சென்னை வருகை ரத்தாகியுள்ளதாக கடந்த 24ம் தேதி தகவல் வெளியானது. இதையடுத்து மருத்துவமனையை ஜனாதிபதியை வைத்து வேறு தேதியில் திறக்கலாமா அல்லது வேறு தலைவரை அழைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டது.

அதேநேரத்தில், குடியரசு தலைவர் ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதால் மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு என்று தமிழக அரசிடம் கேட்டிருந்தார். அதன் அடிப்படையிலேயே விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் ஜூலை முதல் வாரத்துக்குள் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 15ம் தேதி சென்னை வரவுள்ளதாக குடியரசு தலைவர் அலுவலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. கலைஞர் கருணாநிதி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைக்கவுள்ளர். மேலும் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

* முதல் கட்டிடமான ஏ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்பளவில் புறநோயாளி சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
* பி பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது.
* சி பிளாக் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
* பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

The post ரூ.230 கோடியில் கட்டப்பட்ட கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறக்க ஜூன் 15ல் ஜனாதிபதி முர்மு சென்னை வருகை: கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: