விருத்தாசலம்: கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக லாவண்யா கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் மேலிடத்தால் அறிவிக்கப்பட்டார். லாவண்யாவுக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவராக லாவண்யா பொறுப்பேற்கும் நிகழ்ச்சி விருத்தாசலம் காங்கிரஸ் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்காலம்பா தலைமையில் விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் அருகே மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். அப்போது, அவரை தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் அசினா சையதுடன் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் அரசாயி சென்றபோது, அங்கு வந்த மாவட்ட தலைவர் லாவண்யா அரசாயியை தடுத்து நிறுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது, அங்கேயும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் கீழே இறங்கி வந்ததும், அவருக்கு மாலை அணிவிக்க மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் அரசாயி சென்றபோது, அவரை மாலை அணிவிக்க விடாமல் மாவட்ட தலைவர் லாவண்யா தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
