சென்னை: தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை அனுமதி பெற கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த செப்டம்பரில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள விநாயகர் கோயிலில் மனுக்களை வைத்து வழிபாடு நடத்தியபோது தொண்டர்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை அகற்ற காவல்துறை கோரியும் தொண்டர்கள் அதற்கு மறுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடுதல், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது திருச்சி விமான நிலையக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புஸ்ஸி ஆனந்த் தரப்பில், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை காவல்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை 4 வாரம் நீட்டிப்பதாக உத்தரவிட்டார்.
