சென்னை: பாமக தலைவர் அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியலூரில் டால்மியா சிமென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கம் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழக்கு பாதிப்பு ஏற்படுவதாக பாமக தலைவர் அன்புமணி, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் சுரங்கத்திற்குள் நுழைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
இது தொடர்பாக டால்மியா நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜா ரஞ்சித் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், அன்புமணி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், அரியலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் அன்புமணி மற்றும் வழக்கறிஞர் கே.பாலு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, போராட்டத்தில் எந்தவித வன்முறையும் நடைபெறவில்லை எனக்கூறி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால் தடைவித்து உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
