ஓமலூர்: சேலம் மாவட்டம், ஓமலூரில் பல்வேறு கட்சியினர் 2000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி, ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். எனவே, மீண்டும் அவரை கட்சியில் சேர்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. இது 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை.
பொதுச்செயலாளர் எடுத்த நடவடிக்கை இல்லை. அவரும் 4 வருடமாக கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். நாங்கள் முடியாது என்பதை தெளிவாக சொல்லி விட்டோம். பரபரப்பு செய்திகள் ஏதாவது வேண்டும் என்பதற்காக, பத்திரிகைகள் மீண்டும், மீண்டும் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்க கூடாது.
வரும் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. ஒரு சிலர், அவர்களது தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக எதையாவது கூறுவார்கள். அது அவர்களின் கருத்து சுதந்திரம். இன்னும் நிறைய கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் முறையாக அறிவிப்போம். அதிமுக கூட்டணி அமைப்பதில் எந்தவித அழுத்தமும் இல்லை. கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன், தொகுதி பங்கீடு நடைபெறும். யாருக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதி யாருக்கு என்பது பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* யாருக்காக வந்தீங்க? மக்கள் உங்கள
கூப்புட்டாங்களா? 41 பேர் செத்த அப்போ எங்க போனாரு விஜய்: கேள்விகளை அடுக்கி விளாசிய எடப்பாடி
சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 37 வருடம் ஆட்சியில் இருந்துள்ளது. நடிகர் என்பதால் விஜய்க்கு ரசிகர்கள் வரத்தான் செய்வார்கள். அவர் ஒரு சிறந்த நடிகர். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், சிறந்த அரசியல்வாதிகள் நாங்கள் தான். மக்களுக்கு சேவை செய்வது நாங்கள் தான். நாங்கள் தான் மக்களுக்காக பேசி வருகிறோம். திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தவர், இப்போது தான் வெளியே வந்துள்ளார். நான் பொது வாழ்க்கைக்கு 1974ல் வந்தேன். 50 ஆண்டு காலம் ஆகி விட்டது. விஜய்க்கு என்னைப்போல் அரசியல் பக்குவம் கிடையாது. 50 ஆண்டு காலம் மக்கள் பிரச்னையை தெரிந்து கொண்டு அவர்களுடன் உள்ளோம். கரூரில் 41 உயிர்கள் போய் விட்டது. அவர்கள் யாருக்காக உயிரிழந்தார்கள்?.
விஜய்யை பார்ப்பதற்காக, அவர் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம் தான் அது. அவர் என்ன செய்திருக்க வேண்டும்?. நேரடியாக அங்கு போய் இருக்க வேண்டும். ஆனால் போகவில்லை. நாங்கள் போனோம்.எந்த கட்சி என்று நாங்கள் பார்க்கவில்லை. விலை மதிக்க முடியாத உயிர்கள் போய் விட்டது. பாவம் பரிதாபம். அந்த குடும்பத்திற்கு எங்களால் முடிந்த ஆறுதலைக் கூறினோம். அந்த ஆறுதலைக் கூட உங்களால் கூற முடியவில்லை.
அப்படிப்பட்ட நீங்கள் கட்சி நடத்தி என்ன செய்ய போகிறீர்கள்? திரைப்படத் துறையில் உச்சத்தில் இருந்து பல ஆயிரம் கோடி விட்டு வந்துள்ளதாக அவர் கூறுகிறார். அவர் யாருக்காக உச்சத்தில் இருந்து வந்துள்ளார்?. யாராவது அவரை வாருங்கள் என்று அழைத்தார்களா? மக்கள் அவரை அழைக்கவில்லையே?. பிறகு ஏன் அப்படி கூறுகிறார்? எதையுமே செய்யாமல், திரைப்படத்தில் இருக்கும் வரை சம்பாதித்து விட்டு வந்திருக்கிறார்.
அவர் யாருக்காக சினிமாவை விட்டு விட்டு வருகிறார். அரசியலில் அனுபவம் வேண்டும். அது சாதாரண விஷயம் இல்லை. திட்டமிடாமல் விஜய் போனதால் தான், 41 உயிர்கள் போய்விட்டது. இன்றைக்கு 41 குடும்பங்கள் அனாதையாகி விட்டது. ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருப்பதால், எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. தேர்தல் அரசியல் என்பது 8 கோடி மக்களின் வாழ்வாதார பிரச்னை.
ஒரு அரசாங்கம் வந்தால் எப்படி செயல்பட வேண்டும் என்று பார்க்க வேண்டும். கொரோனா காலத்தில் இவர் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பாரா என்று சொல்ல முடியாது. 32 மாவட்டங்களுக்கு நான் நேரில் சென்றேன். இப்படிப்பட்ட சூழல் வரும் போது அவர் எப்படி நடந்து கொள்வார்?. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அரசை நடத்துவதற்கு அனுபவம் வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
