சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நேற்று, தமிழ்நாடு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பரோடா அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்திருந்தது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் எலைட் குரூப் ஏ பிரிவு போட்டியில் நேற்று, தமிழ்நாடு – பரோடா அணிகள் மோதின. டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் ஜோத்ஸ்னில் சிங் 18, சிவாலிக் சர்மா 35 ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்த சாஸ்வத் ராவத் 5 ரன்னில் அவுட்டானார்.
பின் வந்தோரில் சுகிர்த் பாண்டே பொறுப்புடனும் நேர்த்தியாகவும் ஆடி 222 பந்துகளில் 73 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இணை சேர்ந்து ஆடிய விஷ்ணு சோலங்கி 9, நினாத் அஸ்வின் குமார் 66 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் பரோடா அணி 5 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்திருந்தது. சுகிர்த் பாண்டேவுடன் இணை சேர்ந்து ஆடிக்கொண்டிருந்த கேப்டன் அதில் சேத் 45 ரன்னுடன் களத்தில் இருந்தார். தமிழகம் தரப்பில் ஜெகநாதன் ஹேம்சுதேசன் 3, கேப்டன் சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
