* மோஷின் நக்விக்கு கடும் எதிர்ப்பு
கராச்சி: டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலக நேரிடும் என எதிர்மறையாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்விக்கு, அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் முகம்மது ஹபீஸ் கூறுகையில், ‘டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஆட முடியாது என கூறுவது தவறு.
பாக். கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை போட்டிகளில் ஆட அனுப்ப வேண்டும்’ என்றார். பாக். கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் காலித் மஹ்மூத், முன்னாள் செயலாளர் ஆரிப் அலி அப்பாஸி கூறுகையில், ‘உலகக் கோப்பை போட்டிகளில் ஆடாமல் தவிர்ப்பதால் எந்த பயனும் இல்லை. மாறாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் உறுப்பு வாரியங்களுடனான உறவு சீர்கெடும்’ என்றனர்.
* ஜெமிமாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்
வதோதரா: மகளிர் பிரீமியர் லீக் தொடரில், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ஆடியபோது, டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துகள் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். அந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வியை தழுவி, புள்ளிப் பட்டியலில் 4ம் இடத்துக்கு சரிந்தது. இந்நிலையில், தாமதமாக பந்து வீசியதற்காக, டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஜெமிமா ரோட்ரிகசுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரீமியர் லீக் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* உபி வாரியர்ஸில் அமி ஜோன்ஸ்
வதோதரா: மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளில் உபி வாரியர்ஸ் அணியில் ஆடி வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி வீராங்கனை போப் லிச்பீல்ட் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 243 ரன்கள் குவித்து முன்னணி ரன் குவிப்பாளராக திகழ்ந்து வருகிறார்.
கடைசியாக நடந்த போட்டியில் அவர் காயமடைந்ததால், அவருக்கு மாற்றாக, இங்கிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர் அமி ஜோன்ஸ், உபி வாரியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக இன்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டி நடக்கவுள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த லிச்பீல்ட் அணியில் இல்லாதது உபி வாரியர்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
