தாய்லாந்து பேட்மின்டன்: விறுவிறு திரில்லரில் தருண் அமர்க்களம்; காலிறுதிக்குள் நுழைந்தார்

பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். தாய்லாந்தின் பாங்காக் நகரில் பாங்காக் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி, தைவான் வீரர் டாய் சு யிங் உடன் மோதினார். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய தருண், 21-17 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய தைவான் வீரர், 21-14 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார்.

தொடர்ந்து நடந்த 3வது செட்டில் இரு வீரர்களும் சளைக்காமல் புள்ளிகளை எடுப்பதில் முனைப்பு காட்டினர். விறுவிறுப்பாக நடந்த அந்த செட்டை 24-22 என்ற புள்ளிக்கணக்கில் தருண் கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற அவர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், இந்தோனேஷியா வீரர் பிரதிஸ்கா சுஜிவோ பகாஸ் உடன் மோதினார். துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதிஸ்கா, 21-16, 21-11 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இன்னொரு போட்டியில் இந்திய வீரர் மிதுன் மஞ்சுநாத், மலேசிய வீரர் லீ ஜீ ஜியாவிடம், 21-11, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி போட்டியில் இருந்து வெளியேறினார்.

Related Stories: