கூடலூர் ஜன. 29: தினசரி நிலம் வாங்குதல், விற்பனை, ஒப்பந்தங்கள், வாடகை பத்திரங்கள், சட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக முத்திரைத்தாள் பயன்பாடு அவசியமாக இருக்கும் நிலையில், கூடலூரில் தற்போது எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட கடந்த ஒரு வருட காலமாக முத்திரைத்தாள் விற்பனையாளர் இல்லை. இதனால் முத்திரைத்தாள் வாங்க வேண்டுமெனில் பொதுமக்கள் கூடலூர், லோயர் கேம்ப் மற்றும் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து கம்பம் நகரத்திற்கு பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நேரமும், பணமும் செலவழித்து அலைந்து திரிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவசர தேவைகளுக்குக் கூட முத்திரைத்தாள் கிடைக்காததால் பலரின் ஆவணப் பணிகள் தாமதமாகி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, கூடலூரிலேயே உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட அரசு முத்திரைத்தாள் விற்பனையாளரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
