*வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
அரக்கோணம் : அரக்கோணத்தில் விரிவாக்க பணி முடிந்து இரட்டைக்கண் வாராவதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஜங்ஷன் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் வழியாக தினமும் 250க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகிறது.
இதனால், அரக்கோணம் ரயில் நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், பயணிகளின் வசதிகளுக்காக ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் பாதைகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, அரக்கோணம் ரயில் நிலையத்தையொட்டிய பழனிப்பேட்டை பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்கட்டப்பட்ட இரட்டைக்கண் வாராவதியை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் அதன்மேல் பகுதியில் கூடுதல் ரயில் பாதைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வாராவதி விரிவாக்க பணிக்காக தற்காலிகமாக மூடி, போக்குவரத்தை தடை செய்தனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் சிமெண்டால் ஆன நான்கு பாக்ஸ்கள் பொருத்தியும், சாலையின் இரண்டு புறங்களில் மற்றும் குறுக்கே கால்வாய்கள் கட்டி விரிவாக்கம் செய்யும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்தது வந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரயில்வே நிர்வாகம், நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை, காவல் துறையினர் இணைந்து இரட்டைக்கண் வாராவதி விரிவாக்கத்தை பார்வையிட்டனர்.அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்கு வசதி உள்ளதா? எனவும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வரும் வகையில் வசதிகள், வெளிச்சம் போன்றவைகள் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு, கடந்த 42 நாட்களுக்கு முன்பு தற்காலிகமாக மூடப்பட்ட இரட்டைக்கண் வாராவதியை இரவோடு இரவாக முழுமையாக அளவில் திறந்து,வாகன போக்குவரத்திற்கு அனுமதித்தனர். இதையடுத்து, வாகன போக்குவரத்துகள் நேற்று முதல் முழு அளவில் இயங்க தொடங்கியது. இரட்டைக்கண் வாராவதி திறக்கப்பட்டதால் வாகன ஒட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
