*வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு
ஊட்டி : முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம் 2026’ வட்டார அளவிலான போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 2695 வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் படி இளைஞர்களின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் 25ம் தேதி துவங்கி பிப்ரவரி 8ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம் 2026’ எனும் தலைப்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.16 வயது முதல் 35 வயது வரை உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 25ம் தேதி துவங்கியது. இவ்விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் ஆர்வமுடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர். அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.
தொடர்ந்து கையுந்து பந்து, கயிறு இழுத்தல், தடகளம், கபாடி, எறிபந்து, எறிபந்து, கேரம் உள்ளிட்ட போட்டிகள் 4 வட்டாரங்களிலும் நேற்று நடந்தது.
ஊட்டி வட்டாரத்திற்குட்பட்ட போட்டிகள் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகள் துவக்க விழா நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா தலைமை வகித்தார்.
ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். கணேஷ் எம்எல்ஏ பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டிகளில் ஊரக பகுதிகளில் இருந்து 2695 வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அளவிலான இப்போட்டிகளில் வெற்றி பெற்ற தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், விஷ்ணு பிரபு, கஜேந்திரன், ரகுபதி, திவ்யா, ரீட்டா மேரி மற்றும் கார்த்திகேயன், காந்தல் ரவி, ஸ்டேன்லி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
