*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் அபூர்வமாக காணப்படும் மலபார் அணில் மரத்தில் பழங்களை ருசித்ததை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.நீலகிரி மாவட்டம் மிதமான காலநிலை கொண்டுள்ள நிலையில், கோத்தகிரி வன பகுதிகளில் சாம்பல் நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள அணில்கள் இனமான மலபார் அணில்கள் வனங்களில் காணப்படுகின்றன. இவை நாவல் பழம், காட்டு மாங்காய், விக்கிபழம், காட்டு செர்ரி, பலாப்பழம், அத்திப்பழம், நெல்லிக்காய் போன்றவைகள் இதன் முக்கிய உணவாகும்.
குடியிருப்பு பகுதிகளில் வளரும் கொய்யா, மாம்பழம், சீதாபழம், பிளம்ஸ், பேரி, பீச் பழங்களை ருசிப்பதற்காக அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு இந்த அணில் வருவதுண்டு வனஅழிப்பு, வனத்தீ போன்றவற்றாலும் வேட்டையாடுவதாலும் இந்த அணில் அழிவை நோக்கி செல்வதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பறவைகளை போல விதை பரவலை எடுத்து சென்று பரப்பும் பணியை செய்யும் மலபார் அணில் இனத்தை காப்பது அனைவரின் கடமையாகும். தற்போது, அபூர்வமாக காணப்படும் இந்த வகை அணில்கள் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காடுகளில் அவ்வப்போது காணப்படுகிறது.
தற்போது சாலையோர மரத்தில் உள்ள பழங்களை ருசிக்க வந்த மலபார் அணிலை அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
