பாலக்காடு, ஜன. 24: பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் அருகே கயராம்பாறையில் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் மூதாட்டியின் தங்கசங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை நேற்று ஏற்படுத்தியது. ஒத்தப்பாலம் ரயில் நிலையம் அருகே கயராம்பாறையில் வசிப்பவர் பாஞ்சாலி (75). இவரும், இவரது மகள் இந்திரா ஆகியோர் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை இரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்து அறையில் படுத்திருந்த இந்திரா மற்றும் அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது மர்மநபர் தங்கசங்கிலி பறித்துக்கொண்டு சென்றபோது ஒருபகுதி மூதாட்டியின் வீட்டிற்குள் கிடந்தது. இதுகுறித்து மூதாட்டி ஒத்தப்பாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.
