விழுப்புரம்: விழுப்புரம் அருகே பள்ளி வேனில் இருந்த தீயணைப்பு கருவி வெடித்து புகை வெளியேறியதால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. விழுப்புரம் பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளி வாகனத்தில் இன்று காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வளாகம் அருகே வந்தது. அப்போது, வேனின் இருக்கையில் அமர்ந்துள்ள சிறுவர்கள், அவர்கள் இருக்கையின் கீழே வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு பாதுகாப்பு கருவியை எடுத்து பார்த்துள்ளனர். அப்போது, அது கீழே விழுந்த போது, தீயணைப்பு கருவி திடீரென வெடித்து அதிலிருந்து புகை முழுவதும் வெளியேறியது.
இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து வேன் டிரைவர் துரிதமாக செயல்பட்டு கதவுகளை திறந்து அனைத்து மாணவர்களையும் வெளியேற்றினார். மேலும் மூச்சு திணறல் ஏற்பட்ட 6 மாணவர்களை அருகே உள்ள தோகைப்பாடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
