5 ஆண்டுகளில் 2,000 புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, இந்த 5 ஆண்டுகளில் 2,000 புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உரையாற்றினார்.

“பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு; வேலகவுண்டம்பட்டி கிராமம் எலச்சிபாளையம் ஊராட்சியைச் சார்ந்தது. வேலகவுண்டம்பட்டி கிராம மக்கள் தொகை 3,651. இக்கிராமத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இத்துணை சுகாதார நிலையம் பெரிய மணலி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்டது.

எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கெனவே எலச்சிப்பாளையம், மாணிக்கம்பாளையம், பெரிய மணலி மற்றும் திம்மாவரத்துப்பட்டி ஆகிய இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலகவுண்டம்பட்டி கிராமத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் எர்ணாபுரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும், 14 கி.மீ தொலைவில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் செயல்பட்டு வருவதால் இங்கு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலகவுண்டம்பட்டி கிராமத்தைப் பொறுத்தவரை 3,651 மக்கள் தொகை இருக்கின்ற காரணத்தினால் ஏற்கெனவே துணை சுகாதார நிலையத்தின் செயல்பாடு என்பது சிறப்பாக இருந்துக் கொண்டிருக்கிறது. மரியாதைக்குரிய மன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கிராமத்திலிருந்து பெரிய மணலியில் இருக்கின்ற கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இ-சஞ்சீவினி முறையில் மருத்துவ சேவையை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் காலை மற்றும் மாலையில் இருக்கின்ற மருத்துவச் சேவை முழுமையாக செய்திட வேண்டும் என்று மன்ற உறுப்பினர் அவர்கள் கேட்டிருக்கிறார். அந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை ஏற்று காலை, மாலை என்று மருத்துவச் சேவை ஆற்றி வருகிறது. அருகிலுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இருந்து வருகிறது. இந்த மருத்துவமனை ஏற்கெனவே சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் இம்மன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கையினை ஏற்றுதான் இம்மருத்துவமனை செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மன்ற உறுப்பினர் அவர்கள் ஏற்கெனவே கேட்ட கேள்வியின்போது இடங்கள் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இருக்கிற இடத்தில் எல்லாம் மருத்துவமனை அமைப்பது என்பது சாத்தியமில்லாதது. மக்கள் தொகை, ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு உள்ள இடைவெளி இவற்றினை அடிப்படையாக கொண்டு தான் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது, என்றாலும் பரமத்திவேலூர் பொறுத்தவரை கூடச்சேரி, முசிறி ஆகிய 2 இடங்களில் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, அவரின் கோரிக்கையை ஏற்று துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நல்லூர், கபிலர் மலை ஆகிய 2 இடங்களில் பொது சுகாதார அலகு கட்டிடங்கள் ரூ.1 கோடி செலவில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம்பாளையத்தில் ஒரு துணை சுகாதார நிலையம், மாணவியர் விடுதி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கபிலர்மலை, பரமத்தி, வெண்கரை ஆகிய பகுதிகளில் ஆயுஷ் நல மையங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போதும்கூட பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஜேடர்பாளையத்தில் ஒரு புதிய சுகாதார நிலைய கட்டிடம், அதேபோல் நல்லூரில் ஒரு கட்டிடம், மாணிக்கம்பாளையத்தில் ஒரு கட்டிடம், பாலப்பட்டியில் ஒரு கட்டிடம், வேலகவுண்டம்பட்டியில் ஒரு கட்டிடம், பரமத்தியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்று ரூ.28.95 கோடி மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் அவர் தொகுதியில் மட்டுமே நடைபெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு; அருகிலேயே மருத்துவச் சேவைகள் தருகின்ற மருத்துவக் கட்டமைப்புகள் இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில மருத்துவமனைகள் தொடக்க மருத்துவ சேவை மட்டுமே நடைபெற்று வருகிறது என்றாலும், பெருமதிப்பிற்குரிய மன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, அம்மாவட்டத்தின் அமைச்சர் திரு.மூர்த்தி அவர்கள் கூட அந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சேவை தொடங்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு; பழைய கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இந்த அரசு பொறுப்பேதற்கு முன்பு வரை ஏறத்தாழ 3,000 கட்டிடங்களில் 1,500 கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத சிதிலமடைந்த கட்டிடங்கள் என்றும், ஒரு சில கட்டிடங்கள் வாடகை கட்டிடங்களிலும் இயங்கி வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2,000 கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு இந்த 5 ஆண்டுகளில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் பாப்பிரெட்டிப்பட்டியில் அவர் கேட்டிருக்கும் பழைய கட்டிடத்தின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். இன்னொன்று மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். மருத்துவர்களைப் பொறுத்தவரை இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 0% காலிப்பணியிடம் என்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அனைவரும் நன்றாக அறிவார்கள். என்றாலும் மன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கை கூடுதல் மருத்துவர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு; ஏற்கெனவே சொன்ன பதிலில் சொன்னதுபோல ஏறத்தாழ 2,000 கட்டிடங்கள் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக ஒவ்வொரு கட்டிடத்தின் தன்மை குறித்து ஆராய்ந்து புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து, திருத்துறைப்பூண்டி தொகுதி விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு; இது போன்ற கேள்விகளுக்கு நிறைய பதில் அளித்திருக்கிறேன். ஒன்றிய அரசிடம் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பதற்கு தொடர்ந்து நாம் கேட்டு வருகிறோம். 100 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், 100 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், 100 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் 500 துணை சுகாதார நிலையங்களும் தொடர்ந்து கேட்டு 10க்கும் மேற்பட்ட முறை ஒன்றிய அரசிடம் கடிதங்களை கொடுத்து வருகிறோம். அனுமதி கொடுக்கப்பட்டவுடம் நிச்சயம் மன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்கேநகர் சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு; தண்டையார்பேட்டையில் கட்டப்பட்டு வரும் அந்த மருத்துவமனையும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடமும், இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் போன்ற பல்வேறு கட்டிடங்கள் மிக விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வள்ளியூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கூட பணியிடங்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மருத்துவமனைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என உரையாற்றினார்.

Related Stories: