பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே துரைசாமிபுரத்தில் ஊர் பெயர் பலகையை அகற்றுவதற்கு எதிர்ப்பு ெதரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டார்ச் லைட் வெளிச்சத்தில் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட துரைசாமிபுரம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூரின் அருகில் உள்ள ஆரியங்காவூரை சேர்ந்த பொதுமக்கள் ஊரின் நுழைவு பகுதியில் உள்ள துரைசாமிபுரம் என்ற பெயர் பலகையை அகற்ற நினைப்பதாகவும், இதனால் தங்களது அடையாளத்தை மறைக்க நினைப்பதாகவும் கூறி துரைச்சாமிபுரம் பகுதி மக்கள் கலெக்டரிடம் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து புகார் மனு அளித்து வருகி;ன்றனர்.
ஏற்கனவே இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் துரைசாமிபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, சப் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அவர் கூறிய உத்தரவை அரசு அலுவலர்கள் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு துரைச்சாமிபுரம் எல்கையில் உள்ள நட்டாத்தி அய்யனார் கோவிலில் உள்ள ஊர் பெயரை, ஆரியங்காவூரை சேர்ந்தவர்கள் அழித்து விட்டு, ஆரியங்காவூர் என்ற மாற்ற முயற்சி செய்ததாகவும், இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என துரைசாமிபுரம் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தங்களது குழந்தைகளுடன் துரைச்சாமிபுரம் ஊரில் பெயர் பலகை முன்பாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் விஏஓ, ஆர்ஐ உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது கோரிக்கையான துரைச்சாமிபுரம் என்ற பெயர் பலகை அமைத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் டார்ச் லைட் வெளிச்சத்தில் அவர்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலையும் அவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
