ஈரோடு,ஜன.23: ஈரோடு மாவட்டத்தில் 9 இடங்களில் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு 2027-2030ம் வருடத்திற்குள் தொழுநோய் பரவலை முற்றிலும் ஒழித்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 2024-2025ம் ஆண்டில் முதல் நிலை ஊனத்துடன் புதிய நோயாளிகள் மற்றும் குழந்தை நோயாளிகள் சத்தியமங்கலம் நகர்ப்பகுதி,ஜம்பை, குருவரெட்டியூர், சிறுவலூர், திங்களூர், சென்னிமலை, சிவகிரி, புளியம்பட்டி, சித்தோடு ஆகிய 8 வட்டாரங்களிலும் நேரடி தொழுநோய் கண்டுப்பிடிப்பு முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்பணியில் 986 முன் களப்பணியாளர்களும், 97 மேற்பார்வையாளர்களும் ஈடுபட உள்ளனர். இவர்கள் வீடு,வீடாக சென்று ஆண்களை ஆண் முன் களப்பணியாளர்களும், பெண்களை பெண் முன் களப்பணியாளர்களும் தொழுநோய்க்கான பரிசோதனை செய்ய உள்ளனர். இத்தகவலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
