ஈரோடு,ஜன.14: ஈரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த வியாபாரிக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குடோனின் மின் இணைப்பை துண்டித்தனர். ஈரோடு நாராயணவலசு பகுதியல் உள்ள ஒரு குடோனில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நேற்று சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த வியாபாரி விஜயகுமாருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், குடோனில் இருந்த 205 கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, மாசுக்கட்டுபாட்டு வாரியம் மூலம் குடோனின் மின் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
