ஈரோடு, ஜன. 23: ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா நடக்கிறது. கலெக்டர் கந்தசாமி தலைமையில் நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. அன்றைய தினம் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிக்காக ஒத்திகை சமீபத்தில் நடந்தது.
அதனைத்தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு, ஈரோடு ஆனைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடந்தது. இதில், ஈரோடு ஆயுதப்படையை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட போலீசார் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். ஒத்திகைக்காக பேண்டு, வாத்தியம் முழங்கியது. கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்காக அணிவகுப்பில் மரியாதை செலுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
