முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜ கூட்டணியில் இடம்பெறுவதா, திமுக அணியில் இடம்பெறுவதா, தவெக கூட்டணியில் இடம்பெறுவதா, தனிக் கட்சி தொடங்குவதா என்பதில் ஓபிஎஸ் அணி குழப்பத்தில் இருந்து வருகிறது. இதனால் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக வெவ்வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர். அவருடன் இருந்த முக்கிய தலைவர்களின் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் ஓபிஎஸ் நடவடிக்கை பிடிக்காமல் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர். மேலும், ஜெயலலிதா அமைச்சரவையில் 2001-2006, 2011-2016 காலகட்டத்தில் தொழில்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியடைந்ததால், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை, ஓ.பன்னீர் செல்வம் நடத்தி வரும் நிலையில், அதில் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் செயல்பட்டார். டெல்லி பாஜ தலைவர்கள் மூலம் மீண்டும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் முயற்சி எடுத்தார். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதிமுகவிலும் சரி, கூட்டணியிலும் சரி, ஓ.பன்னீர் செல்வத்தை சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இதனால் ஓபிஎஸ் தனியாக கட்சி தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இது வைத்திலிங்கத்துக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த அதிருப்தி காரணமாக வைத்திலிங்கம், திமுகவில் சேர முடிவு செய்தார். இதையொட்டி நேற்று அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சென்னை தலைமைசெயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வழங்கினார். இதன் பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவதற்காக தனது மகன் பிரபு உடன் வைத்திலிங்கம் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை முன்ன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்று அழைத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

முதல்வர், அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்தனர். மேலும், குன்னம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவான ராமச்சந்திரனும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் அணியின் பெரம்பலூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும், தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில பொறுப்பாளராகவும் இருப்பவர் இவர். ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். ஜே.சி.டி.பிரபாகரன் தவெகவில் ஐக்கியமானார். இப்போது வைத்திலிங்கம், திமுகவில் இணைந்துள்ளார்.

* மக்கள் மனதில் முதல்வர் இருக்கிறார்
திமுகவில் இணைந்த பிறகு வைத்திலிங்கம் அளித்த பேட்டி: அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவது சிறந்ததாக இல்லை. தமிழக மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்கிறார்கள், போற்றுகிறார்கள். எல்லாருக்கும் தேவையான திட்டங்களை செய்து மக்கள் மனதில் முதல்வர் இருக்கிறார். அதிமுகவில் இருந்து விலகினாலும் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் இணைத்து கொண்டு இருக்கிறேன். திமுகவில் இணைவதற்கு எந்த வகையான கோரிக்கையும் நான் வைக்க வில்லை. திமுகவில் இருந்து விலகி அதிமுக உருவானது. திராவிட இயக்கம் தாய் கழகம், சமூக நீதிக்காக திராவிட கழகம், அரசியலுக்காக, மக்கள் சேவைக்காக தொடங்கப்பட்டது திமுக. இதனால் நான் திமுகவில் இணைந்தேன். இன்னும் நிறைய பேர் வர இருக்கிறார்கள். வரும் 26ம் தேதி இணைப்பு விழா தஞ்சையில் நடைபெற உள்ளது. அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, சர்வாதிகாரமாக செயல்படுகிறது. தமிழ்நாட்டுக்கு தற்போது திமுக தான், தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு திமுக பாடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதனால் இந்த இயக்கத்தில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

* செங்கோட்டையன் முயற்சி வீண்
ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை தவெகவில் சேர்க்க செங்கோட்டையன் முயற்சி எடுத்தார். அவரிடம் இதுதொடர்பாக பேச்சுநடத்தினாராம். ஆனால் அந்த முயற்சி கைகூட வில்லை.

* திமுகவில் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமசந்திரன் இணைகின்றனர்
பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.டி.ராமச்சந்திரன். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக மாவட்ட செயலாளராக இருந்தார். தற்போது ஓபிஎஸ் அணியில் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரும் திமுகவில் சேர முடிவு செய்துள்ளார். இதுபற்றி இன்று ஆர்.டி.ராமசந்திரனிடம் கேட்ட போது, விரைவில் திமுகவில் நான் சேர வாய்ப்பு உள்ளது. இதுபற்றி இன்று எனது ஆதரவாளர்களுடன் ஆலோசிக்க உள்ளேன் என்றார். அதேபோல முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைகிறார்.

Related Stories: