அதிமுகவில் லடாய்; குளிர் காயும் பாஜ

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் முக்கிய சட்டமன்ற தொகுதியாக இருப்பது திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி. திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்ட பிறகு அதிமுக சார்பில் 2011ம் ஆண்டு எம்எஸ்எம் ஆனந்தன், 2016 மற்றும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் ஒன்றிய செயலாளரான விஜய்குமார் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தற்போது கே.என்.விஜயகுமார் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் பலரும் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். கடந்த 3 முறையும் நகரப்பகுதிகளில் இருந்து மட்டுமே வடக்கு தொகுதிக்கு தலைமை சீட் கொடுத்திருப்பதாகவும், இம்முறை கிராமப்பகுதியை சார்ந்த கட்சியினருக்கு சீட் வழங்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.

அதே வேளையில் கே.என் விஜயகுமாருக்கு 2 முறை கட்சி சீட் வழங்கிவிட்டதால் வேறு நபருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இம்முறையும் நான் தான் போட்டியிடுவேன் கட்சி தலைமை எனக்கு தான் சீட் கொடுக்கும் என எம்எல்ஏ விஜயகுமார் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து வருகிறார். இம்முறை இளைஞரான எனக்குத்தான் சீட் கிடைக்கும் என கட்சி தலைமை கழகத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ள மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான வேல்குமார் எம்.சாமிநாதன் தற்போது முதலே வடக்கு சட்டமன்ற தொகுதியில் தனது தேர்தல் பணிகளை தீவிரபடுத்தி வருகிறார்.

முன்னாள் எம்.பி சிவசாமி, முன்னாள் அமைச்சரும், தற்போது பல்லடம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.எஸ்.எம் ஆனந்தன் ஆகியோரும் வடக்கு தொகுதியை குறிவைத்து காய் நகர்த்துகின்றனர். இந்த சூழலில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜவோ அதிமுக கோஷ்டி பூசலை தனக்கு சாகமாக பயன்படுத்தி குளிர்காய முயற்சித்து வருகிறது. அதிமுகவில் கோஷ்டி பூசல் உள்ளதால் இந்த முறை தொகுதி ஒதுக்க கூடாது. இந்த தொகுதியை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கூறி வருவது அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: