பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட யாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜவும் பின்வாங்கும் நிலையில் உள்ளது. குன்னம் தொகுதியில் பல்வேறு கட்ட ஆய்வுகளை அதிமுக நடத்தியதாம். இதில் ஒவ்வொரு முறையும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, குன்னம் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விடலாம் என்ற நிலைக்கு அதிமுக வந்து விட்டதாம். இதற்கான ஏற்பாடுகளை அதிமுக செய்துள்ளது. இதையறிந்து கூட்டணி கட்சியினர், ‘‘எங்களுக்கு வேண்டாம் நாங்கள் கேட்கும் தொகுதியை கொடுங்கள்’’ என அதிமுகவிடம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அதிமுக தடுமாறி வருகிறது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 2 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொகுதியிலேயே தங்கி தீவிர களப்பணியாற்றி வருகிறார். இந்த முறையும் திமுக சார்பாக அமைச்சர் சிவசங்கர் தான் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவரை எதிர்த்து போட்டியிட அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. பல்வேறு கருத்து கணிப்புகளில் திமுக எளிதில் வெற்றி பெறும் தொகுதிகளில் குன்னம் தொகுதியும் ஒன்று என தெரிவித்துள்ளது.
அதிமுகவில் இத்தொகுதி மாஜி எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன், தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கிறார். இவர், விரைவில் திமுகவில் ஐக்கியமாக உள்ளார். இதனால் இந்த முறை அதிமுக தனது கூட்டணிக்கு குன்னம் தொகுதியை விட்டு கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி கூட்டணி கட்சிகளான அன்புமணியின் பாமக, பாஜ கட்சிகளை களமிறக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையறிந்து அன்புமணி, பாஜ தோற்கும் தொகுதி எங்களுக்கு வேண்டாம் என கறாராக அதிமுகவிடம் கூறி விட்டார்கள். வேறுவழியின்றி கூட்டணியில் உள்ள சிறிய கட்சிக்கு குன்னம் தொகுதியை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாம். ஒருவேளை அதிமுகவை நேரிடையாக களத்தில் இறக்கினாலும், வேட்பாளர்கள் கிடைப்பது கஷ்டம்’’ என்றனர்.
