கோவை, ஜன. 21: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 40-வது பட்டமளிப்பு விழா வரும் பிப்ரவரி 13-ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பட்டமளிப்பு விழா தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பிப்ரவரி 14ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் விழா நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில், பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகள், தொலைநிலை கல்வி மற்றும் பிற கல்வி திட்டங்களின் கீழ் கல்வி பயின்று தகுதி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள், டிப்ளமோ மற்றும் முனைவர் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் இருந்து கடந்த ஏப்ரல்,மே 2023 மற்றும் 2024 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட உள்ளது. விழாவில், பல்கலைக்கழகத்தின் உயர் அலுவலர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் ராஜவேல் தெரிவித்துள்ளார்.
