மெல்போர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றைய பிரிவின் முதல் சுற்றில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரி, பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பொன்சி மோதினர். இதில் 6-0,6-7,4-6,6-3,6-4 என்ற செட் கணக்கில் நூரி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் 6-4,6-4,6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜேன்சனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னாள் நம்பர் 1 வீரரான ரஷ்ய வீரர் டேனியல் மெட்வெடேவ், டச்சு டென்னிஸ் வீரர் ஜே.டி ஜாங் மோதினார். இதில் மெட்வெடேவ் 7-5,6-2,7-6 என்ற செட் கணக்கில் வென்றார். மற்றொரு ரஷ்ய வீரரான ஆண்ட்ரி ரூப்லெவ் 6-4,6-2,6-2 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியை வீழ்த்தினார். அமெரிக்கா வீரரான டாமி பால், சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் கோவாசெவிக்கை 6-4,6-3,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். உலக தரவரிசையில் நம்பர் 1 வீரரான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் பெட்ரோ மார்டினெஸ் ஆகியோர் மோதினர்.
தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி ஜோகோவிச் 6-3,6-2,6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்டினெசை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் வீரரான அலெக்ஸாண்ட்ரே முல்லரை 6-2,3-6,6-3,6-7,6-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்ஸி பாபிரின் வீழ்த்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், அமெரிக்காவின் கோகோ காப் 6-2,6-3 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் சோபியா கெனின் 3-6,2-6 என்ற கணக்கில் சக நாட்டை சேர்ந்த பெய்டன் ஸ்டெர்ன்சிடம் தோல்வியடைந்தார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை எம்மா நவரோ 6-3,3-6,3-6 என்ற செட் கணக்கில் போலந்தின் மாக்டா லினெட்டிடம் வீழ்ந்தார்.
* காயத்தால் வெளியேறிய ஆகர்-அலியாசிம்
தரவரிசையில் 7வது நிலை வீரரும், 2022ம் ஆண்டு மெல்போர்ன் ஓபன் காலிறுதிக்கு தகுதி பெற்றவருமான கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம், போர்ச்சுகல் வீரர் நுனோ போர்ஹெசுடன் மோதினார். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆகர்-அலியாசிம், அடுத்த 2 செட்களையும் 4-6 என இழந்தார். 4வது செட் துவங்குவதற்கு தசைப்பிடிப்பு காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.
