பள்ளி குழந்தைகளின் நலன் காத்திட நமது முதல்வர் இந்தியாவிலேயே முதன்முறையாக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் தற்போது 19.34 லட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டச்சத்து உறுதி செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, அவர்களின் பள்ளி வருகையும், கற்றல் திறனும் உயர்ந்துள்ளதை மாநில திட்டக்குழுவின் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் 36.62 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: பொதுமக்கள் அதிகம் நாடும் சேவைகளை அவர்கள் இருப்பிடத்திற்கு அருகில் வழங்கிடும் வகையில், நவ. 2023 முதல் மார்ச் 2025 வரை மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ். மொத்தம் 4,835 முகாம்கள் நடத்தப்பட்டு, 23.49லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தில், ஜூலை 15, 2025 முதல் நவம்பர் மாதம் 2025 வரை, 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகளும், நகர்ப்புறப் பகுதிகளில் 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளும் வழங்கப்பட்டன. இத்திட்டத்தில், 38.53 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, இதுவரை 36.62 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மக்கள் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் சூழலை உருவாக்கி, நாட்டிற்கே மக்கள் நல அரசிற்கான இலக்கணமாக தமிழக அரசு திகழ்கிறது.
தோழி விடுதி திட்டத்தால் தொழிற்சாலைகளில் அதிக பெண் ஊழியர் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: தங்கள் இருப்பிடங்களை விட்டு நகரங்களுக்கு வரும் பெண்களுக்கு நவீன வசதிகளுடன் நியாயமான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியை பெற்றிட 19 ‘தோழி விடுதிகள்’ ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய திட்டங்கள் மூலம் இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களை அதிகமாக கொண்ட (40.3%) மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மொத்தம் 4.9 லட்சம் சுய உதவிக்குழுக்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.34 லட்சம் கோடி வங்கி கடனாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,000 கோடி மதிப்புடைய 8,037 ஏக்கர் நிலங்கள் மீட்பு: 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைத்துப் பாதுகாக்கும் வகையில் கடந்த 4 ஆண்டில் ரூ.425 கோடி அரசு நிதி ஒதுக்கீட்டில், 352 கோயில்களில் தொன்மை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 76 கோயில்களில் குடமுழுக்குகள் நடந்துள்ளன. மேலும், தமிழ்நாடெங்கும் ரூ.8,057 கோடி மதிப்பீட்டிலான 28,229 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 3,956 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் 19 முக்கிய கோயில்களில் ரூ.1,770 கோடியில் திருப்பணிகள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,262 கோடி மதிப்பிலான 8,037 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சிறப்பு கவனம் காரணமாக சிறு தானியங்களின் சாகுபடி கணிசமாக உயர்வு: பண்பாட்டில் மட்டுமன்றி, வேளாண்மையிலும் தமிழ்நிலம் மரபுகளையும், பன்மைத்துவத்தையும் பேணிப் பாதுகாத்து வருகிறது. ஒருபுறம் தமிழ்நாட்டின் பாசன வேளாண்மை நவீனமடைவதற்கு தனித் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றால், மறுபுறம் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க மானியத்துடன் விதை நெல்லும் விநியோகம் செய்யப்படுகிறது. மண்ணுக்கேற்ற வகையில் 25 மாவட்டங்களில் சிறுதானிய இயக்கம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சிறுதானியங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்புக் கவனம் காரணமாக, சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
‘தொல்குடி திட்டத்தின்’ மூலம் பழங்குடியினருக்கு ரூ.315 கோடியில் 7,255 வீடுகள்: பழங்குடியினர் வாழும் பகுதிகளை மேம்படுத்துவதற்காக ‘தொல்குடி திட்டதின்’ மூலம் ரூ.1000 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்குடியினருக்காக, ரூ.315 கோடி மதிப்பில் 7,255 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லாமல் 246 கிராம் அறிவுசார் மையங்கள் ஆதிதிராவிடர் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் தேவையான வசதிகளும் அவர்களின் வாழ்விடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இயற்கை அனுபவங்களை அளிக்கும் வகையில் கிண்டியில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்கா: பசுமை போர்வை போர்த்திட, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவை இந்த அரசு அமைத்துள்ளது. மேலும், சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு இயற்கை சார்ந்த அனுபவங்களை அளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இவை மட்டுமன்றி மாமல்லபுரத்தில் நந்தவனம் மரபுசார் பூங்காவும், உதகமண்டலம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒரு புதிய பூங்காவும் அமைக்கப் பெறவுள்ளன. இவையாவும் தமிழ்நாடெங்கும் பசுமைப் பரப்பை விரித்திடும் உயரிய இலக்கினை அடைய உதவிகரமாக இருக்கும்.
கடந்த 4 ஆண்டுகளில் 2.86 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு சட்ட பாதுகாப்பு: கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று வனவிலங்கு சரணாலயங்கள், மூன்று பறவைகள் சரணாலயங்கள் மற்றும் ஒரு யானைகள் காப்பகத்தையும் இந்த அரசு அறிவிக்கை செய்ததன் மூலம் 2.86 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பு மேம்படுத்தப்பட்ட சட்டப் பாதுகாப்பினைப் பெற்றுள்ளது. மேலும், பாக் வளைகுடாவில் 44,830 ஹெக்டேர் நீர்ப் பரப்பு கடல்பசு காப்பகமாக அறிவிக்கை செய்யப்பட்டதன் மூலம் கடல் பல்லுயிர்ப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுடன் சேர்த்து மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் மரம் மற்றும் வனப் பரப்பினை தற்போதுள்ள 24.47 சதவீதத்திலிருந்து தேசிய இலக்கான 33 சதவீதமாக உயர்த்த பல்வேறு தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு 11.19% பொருளாதார வளர்ச்சி: முதல்வர் அயராத உழைப்பால் கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதம் என்ற உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இத்தகைய உயர் வளர்ச்சியை நமது மாநில அடைவது இதுவே முதல்முறை. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
முதல்வரின் முகவரி துறை வாயிலாக மனுவின் நிலை அறிய வசதி: மக்களின் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் தீர்த்து வைப்பதை இந்த அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே முதன்மை கடமையாக கொண்டுள்ளது. அதன்படி, முதல்வரின் முகவரி எனும் துறை வாயிலாக இணைய தளம், கைப்பேசி செயலி மற்றும் கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1100 உள்ளிட்ட பல்வேறு வழிகளில் எண் வழங்கப்பட்டு, மனுதாரர்களுக்கு அவர்கள் மனுவின் நிலையினை தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
142 லட்சம் பட்டாக்கள் வினியோகம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வசதி வாரியம் ஆகியவற்றின் குடியிருப்பு திட்டங்களில் பட்டா வழங்குவதில் இருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு காண 142 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 87 குடிநீர்த் திட்டங்கள் ரூ.15 ஆயிரத்து 591 கோடி செல்வில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் 65 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை மேலும் நிறைவு செய்ய கோவளம் வடி நிலப் பகுதியில் ரூ.342 கோடி மதிப்பில் மாமல்லன் நீர்த் தேக்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்ட குடிநீர் கூடுதலாக வினியோகிக்க முடியும்.
