ஆளுநர் உரையில் தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: ஆளுநர் உரையில் தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பினார். இதற்கு அனுமதி மறுக்கவே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து பாஜ மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுகவினர், ஜனநாயகம் சட்டமன்றத்தில் செத்துப் போச்சு என்று முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் நிருபர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

ஆளுநர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் முதலீட்டில் தமிழகம் 4ம் இடத்தில் இருந்தது. தற்போது 6வது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, போக்சோ சட்டத்தில் 55% பாதிக்கப்பட்டிருக்கிறது. பெண்களுடைய பாலியல் தொல்லை 33% அதிகரித்துள்ளது. போதைப் பொருள் பரவல் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு சுமார் 2 ஆயிரம் பேர் இதனால் தற்கொலை செய்துகொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. தவறு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அரசு அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதுமட்டுமல்ல, ஆளுநர் குறித்து என்ன பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே தயாரித்து வந்து முதல்வர் பேசுகிறார், தீர்மானமாக கொண்டுவருகிறார்.

எப்படி ஆளுநர் இப்படிப் பேசுவார் என்பது அவருக்கு தெரியும்? திட்டமிட்டு இந்த அரசு, ஆளுநர் மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதல்வர் அறிக்கையை தயார் செய்து தீர்மானமாக வாசித்திருக்கிறார். மேலும், ஆளுநர் உரையில் வேறு எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. பாரம்பரியமாக மரபு அப்படித்தான். ஆளுநர் உரை மட்டும் தான் இடம்பெற வேண்டும், ஆனால் முதல்வர் தனது கருத்துகளை இதில் பதிவுசெய்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்? இது மரபை மீறிய செயல்.நான் படிக்கின்றபோது நீங்கள் செய்த தவறை சரியென்று நான் படிக்க மாட்டேன் என்று சொல்கிறார் இதுதான் பிரச்னை. நடைபெறும் சம்பவங்கள் நிறைய நான் சொன்னேன், பாலியல் வன்கொடுமை, தொழில் முதலீட்டில் தவறான புள்ளி விவரத்தைக் கொடுக்கிறீர்கள், இதை நான் வாசிக்க வேண்டுமா? திருத்திக் கொடுங்கள் என்றுதான் சொல்கிறார்.

வாசிக்கமாட்டேன் என்று சொல்லவில்லை. தமிழகத்தின் உண்மை நிலையை குறிப்பிடுங்கள் வாசிக்கிறேன் என்கிறார். தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று தான் ஆளுநர் வெளியேறி இருக்கிறார் என்பதற்கு விமர்சனம் செய்வது சரியல்ல, முறையல்ல. நாங்கள் செய்ததும் இல்லை. நாங்கள் அதற்குள் செல்ல விரும்பவில்லை. மக்களுடைய பிரச்னையைப் பேசுவதற்குத் தான் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் பிரச்னையைப் பேசத் தான் வந்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: