சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சிகள் மூலம் இன்று முதல் 23ம் தேதி வரை ‘குப்பை திருவிழா’ என்ற குப்பை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21ம் தேதி (இன்று) முதல் 23ம் தேதி வரை நடைபெறவுள்ள ‘குப்பைத் திருவிழா’ சேகரிப்பு இயக்கம், தூய்மை பணியை நிர்வாக அமைப்பில் இருந்து ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்காக இந்தியாவில் தொடங்கப்படும் முதல் முன்னெடுப்பாகும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தரம் பிரிக்கப்பட்ட உலர் கழிவுகளைச் சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் உலர் கழிவுகளை முறையாக பிரித்து தங்கள் உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட குப்பை சேகரிக்கும் மையங்களில் கொண்டு சேர்க்கப்படும்.
இதில் உள்ளாட்சி அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்பின் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான செயல்பாடுகளில் பங்கெடுத்து தூய்மையான சூழலை உருவாக்குவார்கள். 52 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு பெண்கள் (மகளிர் தூய்மை இயக்கம்) மூலம் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு குப்பை கொண்டு சேர்க்கப்படும்.
