புதுடெல்லி: பாஜ தேசியத் தலைவராக உள்ள ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்து விட்டதால் புதிய தலைவர் தேர்வு நடைபெற்று வந்தது. இதற்கிடையே பீகார் அமைச்சர் நிதின்நபின் பா.ஜ தேசிய செயல் தலைவர் பதவியில் கடந்த மாதம் 14ம் தேதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பா.ஜ தேசிய தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கான மனுத்தாக்கல் நேற்று நடந்தது. இதில் செயல் தலைவர் நிதின் நபீனை ஆதரிக்கும் வகையில் அவரது வேட்பு மனுக்களை பாஜ மூத்த தலைவர்கள் பலர் நேற்று தேர்தலுக்கான அதிகாரியான கே. லட்சுமணிடம் வழங்கினார்கள்.
பாஜ மூத்த தலைவரும் தேர்தல் அதிகாரியுமான கே. லட்சுமணன் இதுபற்றி கூறுகையில்,’ பாஜ தேசியத் தலைவராக நிதின் நபினுக்கு ஆதரவாக 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிரதமர் மோடி உள்பட மூத்த தலைவர்கள் நிதின் நபினின் வேட்புமனுவை முன்மொழிந்துள்ளனர்’ என்றார். நிதின் நபினை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி புதிய பா.ஜ தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று (ஜனவரி 20) பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், அக்கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் முறைப்படி பொறுப்பேற்றார்.
இதில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், பாஜ ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்று நிதின் நபினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பீகாரில் இருந்து 5 முறை எம்எல்ஏவாகவும், பீகார் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் நிதின் நபின். பா.ஜ.வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவதால், தேசிய தலைவராக பொறுப்பேற்றதும், பீகார் அமைச்சர் பதவியை நிதின் நபின் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் இளம் வயது தலைவர்
* புதிய பா.ஜ தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின்நபின் மிகவும் இளம் வயது தலைவராக மாறியுள்ளார்.
* 26 வயதில் எம்எல்ஏவாக தேர்வான இவர், தற்போது 45 வயதில் பா.ஜ தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தீப்மாலா வஸ்தவாவை மணந்தார். தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
