சென்னை: தமிழக காங்கிரசில் 71 மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், சரியாக செயல்படாவிட்டால் 3 மாதத்தில் நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியும் வரும் தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. திமுக உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சி தலைமை 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இந்த குழு முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், காங்கிரசில் ஒரு சிலர் கூட்டணிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வந்தனர். இதையடுத்து, டெல்லியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, கூட்டணி தொடர்பாக பொது வெளியில் பேசும் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் மாநில தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பின்பு இதுவரை நிர்வாகிகள் யாரும் மாற்றப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் மாற்றப்பட்டால் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என கருதி மாநில நிர்வாகிகள் மாற்றத்துக்கு கட்சி மேலிடம் ஒப்புதல் வழங்கவில்லை. அதேநேரம், மாவட்ட தலைவர்கள் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் 77 மாவட்டத் தலைவர்கள் உள்ளனர். அதில் இறந்தோர், ராஜினாமா செய்தோர் என 12 மாவட்டத் தலைவர்கள் பதவிகள் காலியாக இருந்தன. அதனால், மாவட்டத் தலைவர்களை மாற்ற காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. அதற்கு, தமிழக காங்கிரசார், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், யாரையும் மாற்றக்கூடாது. தேர்தல் முடிந்த பின் மாற்றலாம் என்றும் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும், கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய ‘சங்கதன் சிருஜன் அபியான்’ திட்டத்தின் கீழ் 38 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தமிழகம் வந்து மாவட்ட வாரியாக சென்று மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியது. கட்சி ரீதியாக உள்ள 77 மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தகுதியான 3 பேரை தேர்வு செய்தனர். அதற்கான பட்டியல் கட்சி தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில், ஏற்கனவே இருந்த மாவட்ட தலைவர்கள் நீக்கப்பட்டு புதியதாக 71 மாவட்ட தலைவர்களை நியமித்து காங்கிரஸ் தேசிய தலைமை உத்தரவிட்டது. அதில், செல்வப்பெருந்தகைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் பலர் மாற்றப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்ட தலைவர்கள் என மொத்தம் இன்னும் 6 மாவட்டங்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை. நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள பட்டியலில் 4 பெண் மாவட்ட தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். ‘சங்கதன் சிருஜன் அபியான்’ என்ற திட்ட விதிகளின் படி, 3 மாதங்கள் வரை புதிய மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் கண்காணிப்படும். இதில், சரியாக செயல்படாத மாவட்ட தலைவர்கள் உடனடியாக நீக்கப்பட்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருப்பது காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
