சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோழி வளர்ப்பு தொழிலை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் விளைவாக, ஒரு கிலோ சிக்கன் விலை ரூ.300க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, இரு தரப்பினரையும் அழைத்து பேசி கறிக்கோழி வளர்ப்பு கூலியினை ஒரு கிலோவிற்கு ரூ.20 என உயர்த்தி வழங்க ஆவன செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
