வேளாங்கண்ணியை சுற்றிப்பார்க்க வந்தாச்சு ஹெலிகாப்டர் சேவை: ஜனவரி இறுதியில் தொடக்கம்; ஒருவருக்கு ரூ.6,000 கட்டணம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் சேவை இம்மாத இறுதியில் தொடங்கப்படுகிறது. இதில் ஒருவருக்கு ரூ.6,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக தலங்கள் உள்ளது. இது தவிர கோடியக்கரை பறவைகள் சரணாலயம், தமிழகத்தின் உயரமான கலங்கரை விளக்கம், சோழர்கால துறைமுகம் ஆகியவையும் உள்ளது. இதனால் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பாய்மர படகு சவாரி பயிற்சியை கடந்த மாதம் 20ம்தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த வகையில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது. உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் சுற்றுலா தலங்களை ஹெலிகாப்டரில் சுற்றி பார்க்கும் வசதி உள்ளதை போன்ற ஏற்பாடாகும். இதற்காக வேளாங்கண்ணி பேராலயத்துக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 25 கிலோ மீட்டர் வான் பரப்பளவில் பறக்கும் வகையிலான இந்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணிக்கலாம். ஒரு பயணிக்கு ரூ.6 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

இதற்காக பெங்களூருவில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் வேளாங்கண்ணிக்கு இந்த மாதம் வர உள்ளது. முதலில் வேளாங்கண்ணி சுற்றுலா தலத்தை மட்டும் சுற்றி பார்க்கும் வசதி செய்யப்படும். இதன் பின்னர் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி, சென்னை போன்ற விமான நிலையத்துக்கும் ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. சுற்றுலா, பொழுதுபோக்கு ஆகியவற்றை தாண்டி இயற்கை பேரிடர் நிகழும் போதும், அவசர காலங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கும் வசதியுடன் வேளாங்கண்ணியில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர் சேவை குறித்து ஜெயம் ஏவியேசன் என்ற நிறுவனம், மாவட்ட நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹெலிகாப்டர் சேவை தொடங்குவது நாகப்பட்டினம் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இந்த ஹெலிகாப்டர் சேவை இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. முதலில் வேளாங்கண்ணி சுற்றுலா தலத்தை மட்டும் சுற்றி பார்க்கும் வசதி செய்யப்படும். இதன் பின்னர் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி, சென்னை போன்ற விமான நிலையத்துக்கும் ஹெலிகாப்டர் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.

* அரசியல் தலைவர்கள், விவிஐபிக்களுக்கு இனி ஹேப்பிதான்
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், விஐபிக்கள் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு வந்தால் திருச்சி விமான நிலையம் அல்லது தஞ்சாவூர் விமானபடை தளத்திற்கு வான் வழியாக வந்து அதன் பின்னர் தரைவழியாக வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக வேளாங்கண்ணியில் ஹெலிபேட் அமைக்கப்படுகிறது.

Related Stories: