சேலம்: ரசிகர் மன்றத்தினரை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைத்த நடிகர் விஜய், பிறகு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களுக்ேக பெரும்பாலும், கட்சியின் மாவட்ட செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. அரசியல் கட்சி என்றாலும், ரசிகர் மன்ற மனநிலையிலேயே பெரும்பாலான மாவட்ட செயலாளர்களின் பணிகள் தொடர்ந்தது. குறிப்பாக கட்சித்தலைவர் விஜய் போகும் இடமெல்லாம் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத ஆக்ரோஷம் வெளிப்படுவது மட்டுமே அவர்களின் வழக்கமாக இருந்தது. அதிலும், குறிப்பாக மாவட்ட அளவில் நடக்கும் கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துவதற்கு கூட, மாநில அளவிலான நிர்வாகிகள் வரவேண்டும். அல்லது இதுபோன்ற பணிகளில் முன்அனுபவம் உள்ள பக்கத்து மாவட்ட செயலாளர்கள் சென்று, அதற்குரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்ற நிலையே நீடித்தது. விதிமுறைகள் எல்லாம் ஒரு பொருட்டல்ல. எப்படியாவது மாஸ் காட்டவேண்டும் என்பதில் மட்டும் அனைத்து நிர்வாகிகளும் குறியாக இருந்தனர். இந்த அலட்சியம் ஏற்படுத்திய கோரத்தால் தான் கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் 41 உயிர்கள் பலியானது. நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பிறகு, தவெக தலைவர் விஜய்யின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மாற்று கட்சிகளில் இருந்து தனது கட்சிக்கு வருவோரை கண்மூடித்தனமாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது. இது, ஆரம்பத்தில் ரசிகர்களாக இருந்து மாவட்ட நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ள கொங்கு மண்டல நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிருப்தியில் உள்ள கொங்கு மண்டல நிர்வாகிகள் கூறியதாவது: விஜய் நடித்த முதல் படத்தை தியேட்டரில் பார்க்க துவங்கிய காலத்தில் இருந்து பல்வேறு கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி வருகிறோம். திரையுலகில் அபார வெற்றி பெற்று, அரசியல் கட்சி தலைவராக தற்ேபாது உருவெடுத்துள்ளார். இந்த நேரத்தில் கூட அனில்குஞ்சுகள், தற்குறிகள் என்று எங்களை மோசமாக விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் விஜய்யை நம்பி பயணித்து வருகிறோம். எங்களுக்கு உரிய மரியாதையை அவர் கொடுத்து வருகிறார். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக செங்கோட்டையன் வருகைக்கு பிறகு, பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகியவர்களை தவெகவில் சேர்க்கும் படலம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு வருபவர்களுக்கு முக்கியத்துவமும் தரப்படுகிறது. அவர்களை கேட்டு செயல்பட வேண்டும் என்ற மறைமுக உத்தரவுகளும் அதிகளவில் வருகிறது. எங்களை பொறுத்தவரை, விஜய்யிடம் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தீவிரமாக அவரை பின்பற்றி வருகிறோம். அனைவரும் எந்த ஈகோவும் இல்லாமல் பணியாற்றி வருகிறோம்.
ஆனால் பல்ேவறு கட்சிகளில் இருந்து எங்கள் கட்சிக்கு வரும் அரசியல்வாதிகளால், தற்போது குழப்பங்களும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. அவர்களின் கடந்த கால அவல நடவடிக்கைகளை, சமூகஊடகங்கள் ஆதாரத்துடன் வெளியிட்டு அம்பலப்படுத்தி வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் விஜய்க்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல் கட்சியில் இணையும் அவர்கள், தங்களுக்கு தான் சீட்டு கிடைக்கும். எங்களுக்கு தான் அரசியல் அனுபவம் இருக்கிறது என்று கூறியும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது 33 ஆண்டுகளாக விஜய் ரசிகர்களாக வலம் வந்து, நிர்வாகிகளாக இருப்பவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை நண்பா, நண்பிகளாக எங்களை அழைத்துக் கொண்டிருக்கும் தலைவர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
இதுகுறித்து தவெகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் கொங்கு மண்டல நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘செங்கோட்டையன் போன்றவர்களின் வருகைக்கு பின் தமிழக வெற்றிக்கழகம் புத்துயிர் பெற்றுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, அவர் வெளியில் தலைகாட்டியதற்கு இதுபோன்ற நிர்வாகிகள் ஒரு முக்கிய காரணம். ரசிகர்களாக மட்டுமே இருப்பவர்கள், பொறுப்பை உணர்ந்து நிர்வாகிகளாக ெசயல்படவேண்டும் என்ற வகையில் ஒரு சில பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக ேதர்தல் களத்தில் மிக முக்கியமாக இருக்கும் பூத்கமிட்டி அமைப்பை விரைவுபடுத்தி வருகிறோம். மற்றபடி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கா? அல்லது ரசிகர்களாக இருந்து நிர்வாகிகளாக மாறியவர்களுக்காக என்பதை தலைவர் விஜய் முடிவு செய்வார்’’ என்றார்.
