புதுடெல்லி: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதுவரை இப்போராட்டத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் பரவிய நிலையில் இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஈரானில் 9,000 இந்தியர்கள் வசிப்பதாகவும், அங்குள்ள நிலைமையை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பார் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
மேலும், ஈரானில் இருந்து பயணிகள் விமானம் இயக்கப்படுவதால் தற்போதே இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், ஈரானில் இருந்து பயணிகள் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு இந்தியர்கள் பலர் நாடு திரும்பினர். அவர்கள் ஈரானில் எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை என்றும், இன்டர்நெட் இல்லாததால் நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்பது தெளிவாக தெரிந்து கொள்ள முடியவில்லை எனவும் கூறி உள்ளனர். ஈரானில் வசிக்கும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் ஈரானில் இருந்து வெளியேறுவார்கள் என தெரிகிறது.
